Sunday, July 12, 2009

காதல் கவிதைகள்

இளம் வயதில் மனத்தில் பொங்கும் காதல் உணர்வுகளுக்கு ஒரு வடிகாலாக கவிதைப் பேராறு அமைந்தது. கற்பனையை மட்டும் அனுபவிக்கலாம். அந்த அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கடற் காதலி

அலைபாயும் கடல்வழியே
அவளின்று வருவாள்! (அலை)

செந்தாமரை இதழ்களினால்
சொரிவாளே தேனமுதம்!
மெந்தாளை அசைத்துநடம்
எழிலோடு புரிவாளே! (அலை)

அழகுக்குத் தெய்வமவள்
ஆனந்தத் தெய்வம்!
சுழலுமவள் கண்மணியால்
சூழ்ந்துகொள்வாள் என்னை! (அலை)

திரைபொங்கும் பெருங்கடலில்
தினமாடி இன்பம்
கரைகாணா அன்புக்கடல்
கலந்திடவே அளிப்பாள்! (அலை)

----
குயில் விடுதூது

பண்ணால் என்னையும்
பின்னிடும் குயிலே!
எண்ணா எழில்மிகும்
எந்தலை வோனின்
உண்ணா அமுதமே
ஊறிடும் நெஞ்சில்
பண்ணால் இதனைப்
பொழிந்திடு வாயே!
(வேறு)
புவியில் இலாத ஆசை,
பூவில் இலாத நாற்றம்,
கவியில் இலாத பண்ணும்,
காதல் கொளாத இசையும்,
தவியாய்த் தவிக்கு மென்றன்
தாழா உளமுங் கொண்டு
அவியா தவன்பும் தவழ
அவர்தம் வழியை நோக்கும்!

நடரா சனடித் தொழுமாம்
நங்கை எனையார் காணும்?
படராக் காதல் தழுவும்
பழமே போல உள்ளும்
இடரா நடனம் நோக்கி
இல்லா உவகை எய்தும்!
அடரா ததில்லை எந்தன்
அன்பே என்றே கூறாய்!
(வேறு)
உலகுதன் இருளும்
ஊறிய தெனக்கு;
அலகிலாத் துன்பம்
அகமது எண்ணும்;
தலவரைக் காணாத்
தலவியைக் காணாய்,
நிலையிலா நினைவாய்!
நீயுடன் செல்லாய்!
-0-0-
மேகம் விடு தூது

வெண்நுரையாய் விண்கடலில் விளையாடித் தவழ்கின்றாய்!
பெண்ணிங்கே உள் உருகிப் பிரிவுற்று வாடுவதைக்
கண்டிலையோ வெண்முகிலே? கான்கடந்து மலைகடந்து
பண்பாடும் தலைவர்க்குப் பரிந்தோதிச் செல்லாயோ? (1)

வாராயோ வாராயோ வண்முகிலே எனவுன்னைப்
பாராதே ஊணின்றிப் பரிதவித்து நின்றேனே!
சேராயோ என்னுரையைச் சீர்பதிவாழ் ஐயனிடம்?
சோராதே, இளமுகிலே சொன்னதெலாம் உரையாயோ? (2)

நெஞ்சத்துத் தோணியிலே நெடும்பயணம் செய்கின்றான்;
எம்சொல்லும் கேளாத இடத்தெங்கோ உறைகின்றான்;
பஞ்சன்ன மென்முகிலே! பறந்தோடி ஐயனிடம்
‘துஞ்சாளே உனையெண்ணித் துடைப்பாயே துய’ரென்பாய்! (3)

மலைமுகட்டுப் புனல்பொழிந்து மண்தவழ்ந்து , பதுமத்தின்
இலைமுகட்டு முத்தாகி இன்பமுறும் தண்முகிலே!
கலைமுகட்டுப் புகழுற்ற கவியோன் தன் நினைவுற்று
முலைமுகட்டு நீர்சோர முன்வாயில் கிடப்பேனே! (4)

கடல்தந்து வான்வளர்ந்து கடன்செய்யும் நன்முகிலே,
உடல்தங்க உளம்செல்ல உத்தமனை உடன்புணரத்
தொடர்கின்றாள் நங்கையெனத் தூதுரைத்துச் சென்றேஎன்
இடர்தீர்த்துப் பிரிவென்னும் இன்னலினைத் துடைப்பாயே! (5)

சந்தனமும் தழலாகும்; சங்கோசை துயரூட்டும்;
வெந்தனலை மிகைப்படுத்தும், வீசுகின்ற தென்றலுமே!
சுந்தரனை உளமுன்னிச் சூழ்த்தனளே துன்பமெனச்
சிந்தனையில் கொண்டவர்க்குச் செப்பிடுவாய் தண்முகிலே! (6)


‘கவிபாடி உளக்காதல் காட்டுமுனை உளங்கொண்டு
தவித்தோடி தேடுவளே, தண்மலர்சேர்ப் பொழிலெல்லாம்;
“அவியாதோ பிரி”வெனவே அலங்கொண்டாள் தையலென்றே
புவிபோற்றும் மன்னனிடம் போந்தேநீ ஆர்ப்பாயே! (7)

காவிரியில் விளையாடிக் கங்கையிலே தவழ்ந்தோடிப்
பூவிரித்த பெருஞ்சோலைப் புகுந்தேகும் மென்முகிலே!
பாவிரித்துக் கவின்செய்யும் பதுமனையான் உன்னுவதை
நீவிரித்தே உரைசெய்யாய், நீர்விரிக்கும் நன்முகிலே! (8)

நிலம்வளர்த்துத் தண்பெருக்கி நில்லாது புகழ்வெறுத்துக்
கலம்வளர்த்தே எமைக்காத்துக் கருணைசெயும் கார்முகிலே!
வலம்பிடித்துக் காபுகுந்து வான்சிறக்கக் கவிபாடி
நலம்வளர்க்க வாவென்று நயமிகவே சொல்லாயோ? (9)

(இந்த கவிதை, அடியேன் சென்னையில் என் வீட்டிலிருந்து பல மைல்கள் நடந்து ஓர் உறவினர் வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும்போது மனத்தில் புனைந்தது. அதை அப்படியே வீடு திரும்பியதும் ஏடு படுத்தி வைத்திருந்தேன். சில ஆண்டுகளுக்குப் பின், (சுமார் 1963-ம் ஆண்டிருக்கும்), புதுதில்லி வந்தபோது, தில்லித் தமிழ்ச் சங்கம் நடத்திய ஒரு கவிதைப் போட்டிக்கு “பத்மம்” என்கிற புனைப் பெயரில் அனுப்பினேன். எதிர்பாராத விதமாக, அது பாராட்டுக்குரிய் கவிதையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது. சங்க மலரொன்றிலும் வெளியிடப் பட்டது.)
--0—0--
காதல் மயக்கம்
சிரித்துச் சிரித்துப் பார்க்கும் அழகில்
சிந்தை மயங்கி நின்றேன் (சிரித்து)

விரித்து விரித்து விழிகள் நோக்க
வினைகள் அற்றுப் போனேன். (சிரித்து)

நிறுத்தி நிறுத்தி நினைவில் நிறுத்தி
நின்முக ஒளியைக் கண்டேன். (சிரித்து)

வருத்தி வருத்தி வாட்டு கின்ற
வேதனை தொலைந்த தம்மா (சிரித்து)

நினைத்து நினைத்து நெஞ்சம் உருகி
நேசக் கடலாய் ஆகியதே (சிரித்து)

உனையே உனையே எண்ணி எண்ணி
உன்மய மாகி நின்றேன் (சிரித்து)
-0-0-

(தொடரும்)
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
12-7-2009
---------------

No comments:

Post a Comment