கவி நெஞ்சம்
(1960-ம் ஆண்டு, சென்னை கல்லூரிகள் தமிழ் மாணவர் மன்றத்தில்
நடைபெற்ற கவி அரங்கத்தில் பங்கு பெற்ற கவிதை.)
காப்பு
வெள்ளத்தின் வடிவனைய விரிநெஞ்சைக் கொடுத்திட்டு,
உள்ளத்தின் வடிவணைக்க உயர்ந்ததுவாம் கவியமைத்து,
கள்ளத்தின் வடிவழிய கருணையினை அளித்திட்ட
அள்ளத்தேன் அன்பருளும் ஐயனையே சரணம்யான்!
கவி நெஞ்சம்
தேனனைய சுவைபடைத்த தெளிவான பலநூல்கள்
கோனனைய தகுதிபெறும் புலவோர்கள் படைத்தனரே!
ஊனனைய உயிரனைய உலகோரை மகிழ்விக்கும்
வானனைய கவிதைதனை நெஞ்சனவே தொடங்குகிறேன்!
அன்புருவாய் ஆனவளாய், ஆசைமிகப் படைத்தவளாய்
இன்புருவாய் கவிபடைத்து இனிமையெலாம் அதிலடக்கித்
துன்புறுமாம் உளங்களிக்கத் துணைவியெனப் பெயரெடுத்துப்
பண்புறுவாய்; கலையிடத்துப் பக்திகொண்ட எழிலாள்நீ!
நெஞ்செனவே நானுன்னை நேசமுடன் அழைத்திடுவேன்;
பஞ்செனவே பூவெனவே பண்பாடும் குயிலெனவே;
மிஞ்சுகலைக் கவியிடத்து மீளாத காதலினால்
துஞ்சுமெழில் கூடிடவே தூயகவி படைப்பாய்நீ!
துள்ளிவரும் ஓடையென, துளைத்துவரும் வேலெனவே,
மெள்ளவரும் வேழமென மேவிவரும் பல்கவிதை
அள்ளிவரும் ஆறேநீ! அணையாது என்னிதயம்
கொள்ளவரும் கீர்த்தியெலாம் கொழுந்துவிடும் தீபம்நீ!
பண்ணென்னும் பாவாய்நீ, பதமான விளைவுடனே,
மண்ணென்னும் மாண்புடைய மதிபுலவர் மனம்முளைத்து,
கண்ணென்னும் கருத்தாகக் கதிரொளிபோல் தினம்தழைத்து,
எண்ணென்னும் மதிப்பின்றி இனியநடை கற்றாய்காண்!
ஆயிரமா யிரமெண்ண அலைகளுமாய்; திரள்கருத்து
ஆயிரமாம் முத்துக்கள்; அரும்பவள அணிநலன்கள்;
ஆயிரமாம் கற்பனைகள், அழகொளிரும் சங்கங்கள்;
ஆயிரமாய் உரைத்தாலும் அடங்காத கடலணையாய்!
கம்பன் தனை ஆண்டாய்நீ! கவிநெஞ்சக் காரிகையே!
இம்பரும்பர் போற்றும்பேர் இலக்கியத்தைப் படைத்திட்டாய்,
நம்புகாதை சிலம்புதனை நயம்புகலும் குறளதனை
அம்புவியில் அழகாக அளித்திட்ட நங்கையும்நீ!
காவியமாம் காதலியே! கடுவேகம் உன்னிடத்துப்
பாவிசைப்பப் பண்டொருநாள் பல்லவனார் பொன்னுடல்தான்
ஓவியமே கரிந்ததுபோல் உலகுபுகழ்க் கவிதையினால்
சேவிப்பச் செய்தவொரு தீங்கவிஞன் தனைக்காணாய்!
வாழ்த்துவதில் வீழ்த்துவதில்; வகையாகத் துன்பத்தில்
ஆழ்த்துவதில் அகற்றுவதில்; அழகான இன்பத்தில்
சூழ்த்துவதில் சேர்த்துவதில்; சொல்லடுக்கப் பல்பொருளைத்
தாழ்த்துவதில், தருகுவதில்; தனிப்பெரும்பேர் பெற்றாய்நீ!
வசைபாட வகைசெய்தாய், மதிக்காத புல்லரிடம்;
இசைபாட இனிதானாய் இரக்கங்கொள் செல்வரிடம்;
நசைபாட நனியானாய், நற்கவிதைப் புலவரிடம்;
திசைபாட தினமும் தான் செருக்காகச் செல்வாய்காண்!
கோலமிடும் வண்ணத்துக் கூடுமிசை ஒலியதனை
ஓலமிடும் பெருங்கடல்தான் ஓங்கார ஓசைதனைக்
காலமிடும் ஆடலினைக் காணாத புதுமைதனைச்
சீலமிகப் படத்திட்ட சீர்கவிதை எத்தனையோ!
பொழியாத கருத்தில்லை; பொலியாத நொடியில்லை;
வழியாத மனிதரில்லை, வார்க்கின்ற இன்பத்தால்;
அழியாத பொருளாடும் அளவற்ற கவிதைய்லே;
எழிலாகும் எழிலெல்லாம் எடுத்தாளும் உன்பாட்டால்!
மந்திரத்துப் பிறந்ததுவோ; மணியான இக்கவிதை
சுந்தரத்துத் தோய்ந்ததுவோ; சுவைகாணும் உள்ளத்தின்
தந்திரத்தின் வடிவிதுவோ, சொல்முத்துக் கோவையெல்லாம்;
உந்திரத்துப் பெருமையெலாம் ஓயாது பாடுகின்றார்!
நூறெனவே ஆண்டுகளும் நூதனமாய் நடந்தாலும்,
கூறுமெழில் குறையாத குழலாளென் வளர்நெஞ்சே!
நூறில்லை, ஆயிரமாம் நூல்களிதைக் கூறிவிடும்
ஊறில்லை, உன்னிடத்து உள்ளதெலாம் கவிவளமே!
நீதானே என்நெஞ்சம்! நீயேதான் என்னிதயம்!
போதாமே உன்னழகு; பொலிந்திடுமுன் சொல்மணிகள்;
கோதாய்!என் ஒண்விளக்கே! கொவ்வைச்செவ் வாய்திறந்து,
போதாய்,நீ இன்கவியைப் படைத்தாய்!நீ வாழ்கவென்றும்!
-- 0 --
அவையடக்கம்
(1963-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், அடியேனுடைய “கவி நெஞ்சம்” என்னும் கவிதை படிக்கப்பட்டது. அப்போது, தொடக்கத்தில், இந்த “அவையடக்கம்” என்னும் கவிதையைப் படித்தேன்.)
சொல்லாலே கவியமைத்து விந்தை செய்து
தோன்றுகின்ற கற்பனைக்கே உருவம் தந்து
கல்லாலே ஆனதுபோல் உறுதி கொள்ள
கட்டிவைத்தார் காவியத்தைக் கவிஞ ரெல்லாம்.
புல்லான சிறுவன்நான் அறிவு கெட்டுப்
புகழ்மிக்கப் புலவோர்கள் இடையில் நின்று
செல்லாத கவிதைதனை உதிர்க்க வந்தேன்
செவிமடுத்துச் சிறிதென்னை மன்னிப் பீரே!
அழகழகு சொற்களையே ஆளு கின்ற
அரியதமிழ்ப் பெரியோர்கள் முன்னி லையில்,
பழகுமொழி இன் தமிழில் வல்லு நர்கள்
பக்கத்தில் அமர்ந்திருக்க அமைதி யோடு
அழகுதமிழ்ப் பாடலினைக் கேட்க எண்ணும்
ஆசைக்கு மோசந்தான் என்று வந்த
வழிதிரும்பி வீடுசெல்ல எழுந்தி டாதீர்
வணங்குகிறேன் கேட்பீரென் கவியைத் தானே!
மூளுகின்ற கற்பனையைத் தன்னுள் தாங்கி
மொட்டன்ன சொல்லெடுத்துக் கவிதை மாலை
நீளுகின்ற தாய் அழகாய் ஆக்கி விட்ட
நெஞ்சமென்பாள் மென்மையினாள் ஆற்றி வந்த
நாளெண்ணி அவளுக்கோர் பாட்டி சைக்க
நானெண்ணிப் புனைந்திட்ட கவிதை தன்னைக்
கேளுங்கள், பிழைபொறுத்து; நன்மை தங்கக்
கூட்டுங்கள் பெருமைதனை எனக்குத் தானே!
-- 0 --
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
21-7-09
---------------
Tuesday, July 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment