Wednesday, July 22, 2009

தனிக் கவிதைகள் -- 8

குறிஞ்சி மகள்
இருமலைச் சாரற்றேன் ஈட்டுங் குறிஞ்சி
யருமலர் சூடும் அகில்சூழ் அரிமண
லோதி யரவமென யாயுள்ளப் பேதறவு
மல்கிடச் செல்லும் மடவரல் வல்லி
கடிகாதல் முந்த கருயாமத் ‘தென்னையும்
நெடிதுகாத் தாரோ நிலத்தே’ எனவுயிர்த்து
நீள்வழிப் போவள் கடிது.
{ஏழடிப் ப#றொடை வெண்பா)
குறிஞ்சி
களவு
(ஓதி – கூந்தல்; பேதறவு – மயக்கம்; அகில் – அகில் மணம்.
தலைவனை நாடிச் செல்லும் தலைவியினைப் பற்றி இயற்றியது.
குறிஞ்சித் திணைக்கு உரிய முதல், கரு, உரிப் பொருள்கள் அமைந்திருத்தலைக் காண்க.)
-- 0 --
கவி ஊற்று -- 1
உன்னைக் கண்ட போதினிலே -- மன
ஊற்றில் கவிதை சுரக்குதம்மா!
கன்னல் மொழியைக் கேட்கையிலே
கனிந்த பாடல் பிறக்குதம்மா!

நித்தம் நின்னை நினைக்கையிலே -- மன
நிறைவால் காவியம் தோன்றுதம்மா!
கத்துங் குயிலின் ஓசையிலே -- உன்றன்
காதல் இசையே கேட்குதம்மா!

முந்தைப் பிறவி நினைவெல்லாம் -- உளம்
முன்னே நின்று வாழுதம்மா!
எந்தன் உள்ளக் கோயிலிலே -- உன்
எழிலே திருவாய் ஆளுதம்மா!

நேற்றோ இன்றோ நெடுநாளாய் -- மிக
நீடு நிலைத்த கற்பனைகள்
ஆற்றின் நீராய்க் காதலெனும் -- பெரும்
ஆழி தன்னைச் சேருதம்மா!

வானம் போன்று பரந்ததம்மா! -- இவ்
வையம் போல நிறந்ததம்மா!
மோனக் கடலின் ஆழம்போல் -- மன
மோகம் பெரிதாய் மூண்டதம்மா!

எண்ணப் பொழிலின் நடுவிருந்து -- நீ
ஏந்தும் யாழின் ஒலியெழுப்ப
வண்ணக் கற்பனை உருவெடுத்த -- இன்ப
மாரி பொழிந்து சிறக்குதம்மா!
-- 0 --
கவி ஊற்று -- 2
வாடிக்கிடந்த என்னுள்ளம் வறட்சியுற்று, கற்பனையைத்
தேடிக்கிடந்த என்னெஞ்சம் சோர்வடைந்து போகையிலே,
நாடியிழந்த உடலுக்கு நல்லுயிரே வந்ததுபோல்
மூடிக்கிடந்த இதயத்தை முன்வந்தே திறந்திட்டாய்!

பாரதனில் என்வாழ்வு பாலைவன வீணிலமாய்ச்
சீரெதுவும் இல்லாமல் தீர்ந்திடுமோ எனவஞ்ச,
வேறெதுவும் இன்மையினேன் வீறுற்றே எழுந்திடவே
சீரதுவே வருவதுபோல் சீராள்நீ வந்தனையோ!
-- 0 --
இசைப்பாய் என்று வந்தேன்!

இசைப்பாய் என்று வந்தேன் -- உன்
இசையில் மயங்கி நிற்க -- நீ (இசைப்பாய்)

மலராத மொட்டு மலர
மணக்காத மலரும் மணக்க
வளராத முல்லை வளர
வழங்காத இன்பம் தரவே -- நீ (இசைப்பாய்)

தணியாத தாகம் கொண்ட
சரகான தளிரும் தழைக்க
இனிக்கின்ற காதல் தன்னால்
இறக்காது நானும் பிழைக்க -- நீ (இசைப்பாய்)
-- 0 --

யாருக்குக் காத்திருப்பாய்?

யாருக்குக் காத்திருப்பாய் -- நீ

ஊருக்குள் இருளகற்ற
உலவிவரும் நிலவுக்கா?
தாருக்குள் வண்டொலிக்கும்
தளிர்நடையாள் முகத்துக்கா? (யாருக்கு)

நீருக்குள் நெளிந்தோடும்
நீள்கயலின் பார்வைக்கா?
பாருக்கே பெருமையெனப்
பரிவுடைய கண்ணுக்கா? (யாருக்கு)

வீரத்தின் உருவெடுத்து
வளைந்தநெடு வில்லுக்கா?
நேருக்கு நேரான
நீள்புருவம் இரண்டிற்கா? (யாருக்கு)
-- 0 --
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
22-7-2009
---------------------

No comments:

Post a Comment