Sunday, July 19, 2009

தனிக் கவிதைகள் -- 6

மலராயா சிறிதெனக்கே

வானத்தில் நிலவுவர
வாடியதேன் உன்முகமே?
தேனமுதம் தாராது
சோர்ந்ததுமேன் தாமரையே?

வண்டுநானே வந்துள்ளேன்
வதங்கியேநீ இருப்பதுமேன்?
கண்டெதனை அஞ்சியே நீ
கலங்குகின்றாய் செங்கமலம்?

அல்லியுன்னைத் திட்டினளா?
அவமானம் செய்தனளா?
முல்லைப்பூ அதட்டினளா?
முகம்மூடி அழுவதுமேன்?

அன்பருளும் இலக்குமியும்
அகன்றனளா உனைவிட்டு?
துன்பத்தில் இருக்குமுனைத்
தேற்றிடவே வந்துள்ளேன்!

திறப்பாயா உன்னிதழை?
சிரிப்பாயா எழில்மலரே?
மறப்பேனோ உனையேநான்?
மலராயா சிறிதென்னக்கே?

--0—

எங்கள் குழு
(சென்னை விவேகானந்தா கல்லூரியில் பட்டப் படித்து வந்த போது
அடியேனுடன் மூன்று தோழர்கள் ஒரே குழுவாக இருப்போம். அடியேனுடைய பெயருடன் கூடியவர், ஸ்ரீனிவாஸன், எழும்பூரிலிருந்து வருவார்; இராமசுப்பிரமணியன் இருந்த்து பெரம்பூர்; அடியேனும் கலியாணசுந்தரமும் மயிலையில் இருந்தோம்; கல்லூரியில் எப்போதும் சேர்ந்தே இருப்போம். எங்கள் குழுவைப் பற்றி அடியேன் அப்போது எழுதிய கவிதை இது.)

மயிலைமா வூரன் கலியா ணசுந்தர்
நயங்கனிந் தீர்க்க நலம்பொங்கும்; நாளும்
துயிலெழு முன்னே ரெயிலேறிச் செல்லும்
இராமசுப்பு நட்பிற் கிணையார் உரைப்பர்?
செழுமையாம் நுண்ணறிவும் தேற்றமும் சேரும்
திருநிவா சன் தானும் சீனியானும் சேரின்
இருக்குமோ மண்ணிலே காலம்?
-- 0 --
கல்யாண சுந்தரம்
(நண்பன் திரு கல்யாணசுந்தரம் தனது இருபதாம் வயதில், 23-3-1962 அன்று
அகால மரணம் அடைந்ததைக் கேள்வியுற்று, ஆறாத் துயர் கொண்டு, நாத்தழுக்க, உளம் ஒடிய நின்றோம். கலை வடிவை ரசித்து எம்மை இன்பத்தில் ஆழ்த்தி வந்த உயிரனைய நண்பன் இறந்ததனால் ஏற்பட்ட உணர்ச்சியிலே எழுந்த கவிதை இது. அவனுடைய ஆன்மா சாந்தி பெறுவதாக!)

நெஞ்சோடு நெஞ்சுரசி நேரின்பம் கண்டபெரும்
நாளெண்ணி நைந்துருக நீசென்றாய் எமைவிட்டு;
நஞ்சாகும் துயர்க்கடலில் நலிந்துழல எம்முறவின்
நிலையறுத்துத் தொடராத நிலைநாடிச் சென்றாயோ?

கண்ணுக்கு ஒளியீந்து கணமொன்றில் பறிக்கின்ற
காட்சியினை யாம்கண்டு கலங்கிடவே நிற்கின்றோம்;
பண்ணுக்குச் சொல்லமையா; பார்வைக்குத் திரையிட்டப்
பெற்றவராய் நிற்கின்றோம், ஒளியிழந்த அகல்கண்டு!
-- 0 --
மழையே வாராய்!

மணமெழுப்பி முகில்சொரிய வருவாய்நீ மழையே!
குணதிசையில் கடலுன்னைக் கூப்பிடுதே அறியாய்!
மணிமணியாய் முற்றத்தில் வளர்க்கின்ற தண்மை
தணியாத பேரின்பம் தருவாயோ இன்றே!
இணையில்லை எமக்கென்றே இறுமாப்பு தங்க
மணஞ்செய்யும் வீட்டினிலே வழுவாது விரைந்து
கணப்பொழுதில் குளமாக்கிக் களிப்பெய்திச் செல்வாய்!
அணங்கென்றே அன்புடனே அழைக்கின்றேன் வாராய்!
-- 0 --
(கல்லூரியில் மனோன்மணீயம் என்னும் காவியம் ஒரு பாடமாக வைத்திருந்தார்கள். அந்த நாடகத்தில் வந்த இரு பாத்திரங்கள் பற்றியவை இந்த கவிதைகள்:)
ஜீவகன்

ஆண்மையும் நெஞ்சினில் ஆர்த்திடும் வீரமும்
மாண்டதன் நாட்டினிற் பற்றுமே -- பாண்டியன்
சீவகனாய் பேர்புகழும் சேர்ந்ததொரு பண்பொளியாய்
ஓவியமாய்க் கூடும் அழகு.

குடிலன்

குடிபோற்றும் மன்னன் குலமொழிக்க நெஞ்சில்
விடந்தங்கத் தீவினைகள் ஆற்றி -- குடிலனார்
வாழும் உலகத்துள் வாய்மைக்கு மில்லையோ
வாழும் உறுதியே தான்!
-- 0 --
அன்னமே! அன்னமே!
(டென்னிசன் என்னும் ஆங்கிலக் கவிஞரின் ‘ஸ்வாலோ ஸ்வாலோ’
என்னும் கவிதை கல்லூரியில் ஆங்கில பாடத்தில் இடம் பெற்றிருந்தது. அக்கவிதையைத் தழுவி எழுதப் பட்டது இது.)

அன்னமே! அன்னமே! அழகிய அன்னமே!
தென்னகம் புகுந்திடின் செல்லுவாய் அவளிடம்
பொன் தனைப் பூசியப் பொற்சுவர் இருந்தே
உன்னிடம் சொல்வதை உரைத்திடு வாயே!
எம்மைநீ அறிவாய் எழில்மிகு அன்னமே!
உண்மையில் அழகும் உறுதியிலா உள்ளமும்
தன்மையாய்ப் பொருந்தும் தென்னவர் கட்கே!
மென்மிகு நெஞ்சமும் மேன்மை உறுதியும்
கொண்டவர் நாங்கள்; கொண்டிலை அழகை!
கொண்டிடின் உன்னைக் கூடவே தொடர்ந்திட
அவளகக் கூரையில் அமர்ந்தே நானும்
நவரசம் தவழ நயமாய்க் குழலில்
புள்போல் இசைப்பேன் காதல் கீதம்;
உள்ளே அழைத்தே உனைப்போல் என்னை
மார்பில் அணைத்தே இதயத் தொட்டிலில்
போர்த்தி அசைப்பள், மரணம் என்னைத்
தழுவும் வரையில்! சொல்வாய் அவளிடம்:
வாழ்வோ அருகும் அன்போ விரியும்;
அனன்மே, அனன்மே! அங்குநீ சென்றே
இன்னமு(து) இசைதனை இறைத்தே அவளை
என்னுடை யதாக்காய், எனதுள மலராய்!
தென்னகம் சென்றுநீ செப்புவாய் அவளிடம்
உன்னையே தொடர்கிறேன் என்றே!
அனனமே, அன்னமே! அழகிய அன்னமே!
-- 0 --
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
19-7-09
---------------

No comments:

Post a Comment