Sunday, July 26, 2009

தனிக் கவிதைகள் -- 12

பிறையாகிப் போனதுவேன்?

வட்ட நிலா உன்னைவெட்டி வதைத்தவரும் யாரோ?
எட்ட முடி யாதவுனைத் தொட்டவர்தான் எவரோ? (வட்ட)

கள்ளமிருள் சூழ் உலகில் கலங்காதே என்பதுபோல்
உள்ளமுரு துயர்துடைக்க உலவிவந்தாய் முழுநிலவாய் (வட்ட)

நல்லகவி கற்பனைகள் நீஎனெக்குத் தந்ததெல்லாம்
இல்லையென ஆகியதே; இனியெங்கே நான் செல்வேன்?
அல்லிமலர் விரிந்திடுமோ? அலைகடலின் இசைவருமோ?
சொல்லெனது நாவருமோ? சுகம்வருமோ சொல்பிறையே! (வட்ட)

காதலினால் பிரிவுற்ற கன்னியவள் தவிக்கின்ற
வேதனைக்கே அளவிலையோ? வெம்மையென எரிக்கின்றாய்!
காதம்பல நடந்ததனால் இளைத்தாயோ ஒருபாதி?
நீதந்த குளிர்மையிலே உருகியதோ உன்னுருவம்? (வட்ட)

பாலூட்ட குழந்தைக்கே பாட்டுசொல்ல என்செய்வேன்?
தாலாட்டி உனைக்காட்ட தங்கநிலா உருவெங்கே?
காலத்தின் பாதையிலே கரைந்தாயோ ஒருபாதி?
ஞாலத்தின் இருளுன்னை நஞ்சாகக் கருக்கியதோ? (வட்ட)

பிறையாகிப் போனதுவோர் பெருமுனிவன் சாபமதோ?
குறையாகிப் போனதுவேன் கோலமுறு கவிமலர்கள்?
வரையாத ஓவியன்கை வண்ணமுனை வளைத்ததுவோ?
இரையாக அரவமுனை அரையாக்கித் தீர்த்ததுவோ? (வட்ட)
-- 0 --

எது முன்னேற்றம்? ---- கல்வி!
(சென்னை வனொலியில் இக்கவிதை ஒலிபரப்பப் பட்டது.)

வள்ளுவனும் இளங்கோவும் மாகவிஞன் கம்பனுமே
துள்ளுகவி இலக்கியங்கள் தந்த நாடிதுவாம்!
கல்தோன்றி மண்தோன்றாக் காலம் முதலாய்
நற்றமிழும் நடைபயின்ற நங்கையெனப் போற்றுகிறோம்!

கற்பதே தருக்களெனக் கல்விக் கூடங்களும்
சொல்பயின்று பொருள்பயின்ற ஞானப் பேறுடைந்து
ஊன்மறைந் தாலும் உற்றபுகழ் மறையாமல்
நூலுருவாய் வாழ்ந்தவரும் நல்லறி வாளர்களும்
மல்கிய நாடென்றே மார்தட்டிக் கொள்கின்றோம்!
கல்வியிலே முன்னேறி கற்பதெல்லாம் கற்றோமா?
ஆக்கப் பொருளெல்லாம் அறிந்து சிறந்தோமா?
தேக்கத்தில் சுழலாமல் திசையறிந்து வந்தோமா?
காலப் பெருவெள்ளம் கடிதே செல்கிறதே,
ஞாலத்தில் உள்ளதெல்லாம் நன்கே அறிந்தோமா?
அணுத்துளைத்துப் போர்புரிய அழகாகக் கற்றோமே
ஆள்துளைக்கும் துயரதனை, அறியாமைப் பேயை
பஞ்சக் கொடுமையினை பிணியின் நஞ்சுதனை
விஞ்சி அறிவாலே விரட்டி அடித்தோமா?
அகரம் முதலாக அருங்கலைகள் கற்றுணர்ந்து
அகன்றதுவாய் உளம்விரிந்து ஆற்றத் தொடங்குமுனம்
வீட்டுத் தொல்லையினால் விடுத்தே ஏகுகிறான்;
நாட்டமெல்லாம் தொழிலொன்றை நடத்திப் பிழைப்பதுதான்!
பள்ளியிலே படித்தவைப் பறந்தோடிப் போயிடவும்
உள்ளம் விரிவின்றி உயரும் அறிவின்றி
பள்ளத்தில் உழன்று பொய்வாழ்வு வாழ்கின்றான்.
மாதத்தின் முதல்தேதி; மனம்மகிழத் திரைப்படமும்;
வீதியிலே நிகழ்த்துகின்ற வெறுமை அரட்டைகளும்
தானுற்ற பேறனவே தனித்தபெரு வாழ்வெனவே
தானுந்தன் மனைமக்கள் தமமையனைத்தும் அதேகதியில்
போக்குகின்ற வாழ்வும் ஓர் புவனத்து வாழ்வாமோ?
நீக்கி மனவிருளை நிலைக்கும் அறிவொளியை
ஏற்றாத கல்வியினால் என்பயனாம்? என்பயனாம்?
வற்றாத அறிவென்னும் நல்லூற்றைப் பேணி
ஆவலும் அதிசயமும் சாவாமல் உள்ளத்தில்
விஞ்ஞானம் நுட்பவியல் விந்தையிலே ஆர்வமுடன்
எஞ்ஞான்றும் பயில்வதிலே ஈடுபாடும் துடிதுடிப்பும்
கூடிவிட எழுப்புதலே கல்விக்கு அழகாம்!
தேடி அறிகின்ற தேர்ந்த மனப்பாங்கை
வார்க்கின்ற கல்வியே வளர்ச்சிக்கு அடையாளம்!
யார்க்கும் பயனற்ற யந்திர உலகத்தில்
தாவிப் புகுந்துவிட ஓர்படியாய் இல்லாமல்,
பாவி மொழிவெறியை, பிரதேச வெறிக்கனலை,
அடுத்தவன் பசியாலே அல்லலுறும் போதிலும்
விடுக்காத சுயநலத்தை, வீண்பேச்சு ஏசல்களை,
அறிவுச் சோகையினை, குறிக்கோளே இல்லாத
குழப்பத்தை, மனவிருளை கூட்டாத கல்விவேண்டும்.
மொழியிலே அத்தனையும் முற்றுமுளக் கலைகளையும்
வாழ்க்கைப் பண்புகளை, வானம்போல் இதயத்தை,
ஆழ்ந்த ஞானந்தான் அவனியிலே பெரிதெனவே
தெளிவாக்கும் எண்ணத்தைத் தளிரவே செய்திடுமேல்
புகட்டும் கல்விக்கோர் நிகரில்லை யாமே!
உணர்ச்சிக்கு அடிமையாகி, ஊரழிய பேரழிய
பணத்தைச் சேர்த்துவைத்துப் பகட்டாக வாழ்கின்ற
புன்மையினை நன்குணர்த்திப் புகட்டுவது நற்கல்வி!
நன்மையெல்லாம் பெற்று நாடெல்லாம் மேன்மைகொள
வையத்து மக்களெல்லாம் உய்யச் செயலாற்றும்
பக்குவத்தை, கடலெனவே பரந்த கண்ணோக்கைத்
தக்கபடி உருவாக்கும் தரம்மிக்க கல்விதான்
முன்னேற்றப் பாதைக்கு வழிகாட்டும் விளக்காகும்;
எந்நேரமும் ஒளிகுன்றா உன்னத தீபமதே!

பண்டைப் பழங்கதையின் பெருமையை ஓயாது
தொண்டை கிழியத் தோற்றுவதை விட்டொழித்துப்
புத்தறிவை நாடும் புதுவிழிப்பைப் பெறுவோம்!
கற்றியும் ஆற்றலினைக் கரையாது காப்போம்!
எத்திசையும் அறிவுச்சுடர் எட்டி இருளகற்ற
மெத்த கல்விதரும் மேன்மையைப் பெறுவோம்!
-- 0 --
திருமண வாழ்த்து

இன்பப் பொழுதென இக்கண மானதே
இசையால் எனைநீ மகிழ்விக் காயோ (இன்ப)

அன்புப் பெரியவர் ஆசை பெருகிடவே
ஆனந்தம் கொள்ளும் நம்மணக் கோலத்தால் (இன்ப)

திருக்கரம் பற்றநீ கண்ட கனவுகள்
உருவெடுத்த உவகை நிலையிதுவோ
இருவராய் நின்றதன் வகையும் மாறி
ஒருமனத் தவராய் ஒருநிலை எய்திய (இன்ப)
--- 0 ---
நினைவில் நிற்கின்றய்!
நினைவெல்லாம் ஊடுருவி நிற்கின்றாய்
எனையகத்தே பாலிக்கும் அன்பே! என் (நினை)
கணந்தோறும் அகலாது கற்பனைகள் கூட்டுவித்து
மணிக்கவிதை முத்துக்கள் அணிசெய்ய வருகின்றாய் (நினை)
வானகத்தே வதிசெய்யும் வளர்திங்கள் பொருள்கொள்ளும்
தேனகத்தே மல்குமெழில் தாமரையும் பொருள்கொள்ளும்
யானகத்தே பொருள்கொண்ட ஞானமெல்லாம் உருவெடுத்து
நாணிஎதிர் வரும் உன்னால் நடை அன்னம் பொருள்கொள்ளும்! (நினை)
-- 0 --
திருமண ஊஞ்சல் பாட்டு
ஆடாய், ஊஞ்சல் நீ ஆடாய்! (ஆடாய்)
நீடிய கண்ணாள் திருவுடனே
நீல ஒளிவீசும் அழகுடனே (ஆடாய்)
நாடும் நகரமும் சுற்றமெல்லாம்
நற்களிப் பெய்திட நயமாகவே நீ (ஆடாய்)
அழகும் பண்பும் சேர்ந்திருக்கையில்
அன்பின் அருளும் கூடியிருக்கையில் (ஆடாய்)
பழகும் இன்சுவைப் பண்ணிசைத்தே
பணிகின்ற அடியார்கள் வாழ்ந்திடவே (ஆடாய்)
-- 0 --
திருமண வாழ்த்து
அன்பும் திருவும் அறிவின் ஒளியின்
பண்பாம் சிறப்பும் பொருந்த நீவிர்
இன்பம் சேர இனிது வாழ்வீர்
அன்பன் நாரணன் அருளின் மேன்மையால்!
-- 0 --
நிலவைக் கண்டு…
நிலவை நீயென்று எண்ணி
நீள் கரம் நீட்டி
மலரெனப் பிடிக்கச் சென்று
மனம் பேதலித் தேனே -- உன்றன்
கோல உருவம் என்றன்
குகை மனத்தில் ஒளிக்கக்
கால உருவம் அழிந்து -- நான்
களிப்பில் மூழ்கி நின்றேன்
தேனின் சுவைப் பேச்சும்
தெளிந்த முகப் பாங்கும்
வானின் வளைவு இமையும் -- எல்லாம்
வளர்க்கும் இன்ப போதை
ஆடி வரும் நின் நடையும்
அரவம் போலுன் சடையும்
தேடி வருகின்ற கண்ணும் -- என்னைத்
திக்கு முக்காடப் பண்ணும்
-- 0 --
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
26-7-2009
-------------

No comments:

Post a Comment