வாடும் மலர் நான்
வாழ்வென்னும் சோலையிலே
மலரென நான் பூத்து
வாடிடுமுன்னே நீ வாராயோ
-- நீ -- வாராயோ (வாழ்)
ஊழ்வினையின் சோதனையோ
உள்ளத்தின் வேதனையோ
உன் நினைவின் சோகமெனை உருக்கிடவே
-- எனை -- உருக்கிடவே (வாழ்)
காதலெனும் மணமிட்டுக்
காத்திருக்க எனைவத்தாய்!
காலமெலாம் உனையெண்ணிக் காணாமல்
--- உனைக் -- காணாமல் (வாழ்)
சாதலெனும் புயலென்னைத்
தழுவிடவே வருமுன்னே
தாவி நீ வாராயெனத் தவிப்பேனே
--- நான் -- தவிப்பேனே (வாழ்)
-- 0 --
ஓடிவா!
ஓ……ஓடிவா --- நீ
ஓ……ஓடிவா (ஓடிவா)
ஓடாமல் நின்றுவிட்டால் – நீ
ஓடாமல் நின்றுவிட்டால் -- என்
உள்ளமும்தான் நின்றுவிடும் -- நீ (ஓடிவா)
சூடாத மாலையேந்த -- நீ
சூடாத மாலையேந்த
சோபையெல்லாம் உன்னையேந்த – நீ (ஓடிவா)
நீளாத இரவு உன்னை
நெகிழ்த்திட வில்லையா?
தாளாத என் துயரம்
தணிந்திடவே இங்கே நீ (ஓடிவா)
மீட்டாத வீணையின்ப
மெல்லிசையும் கொடுத்திடுமோ
தீட்டாத ஓவியம் தான்
சீருடைத்தோ என்றெண்ணி -- நீ (ஓடிவா)
-- 0 --
தனிமை
தனிமையில் வாடி
தண்மையிலா தோடி
இனிமையும் இன்பமும் இணையா நாளாய்
எனவானதுவே எனதிந்த வாழ்வே!
உன் நினைவே துணையாய்
உன்குரலே இசையாய்
உன்முகமே பொன்னொளிர் மதியாய்
என்வாழ்வே உலகாய் ஆனதுவே!
மதுவுள்ள மலராய்ப்
புதுமையின் எழிலாய்
மெதுவாய்த் தவழ்ந்து மேவுமின் நதியாய்
வதிந்தாய் என்மனதில் வளர்ந்தாய் நீயே!
-- 0 --
மா வீரனின் மரண சாஸனம்
{1965-ம் ஆண்டில், பாகிஸ்தானுடன் நடந்த போரில் வீர மரணம்
எய்திய லெப்டினண்ட் கர்னல் என். என். கன்னா, இறப்பதற்குச்
சில தினங்களுக்கு முன் எழுதி வைத்த அழகிய ஆங்கிலக் கவிதையின் மொழிபெயர்ப்பு இது. ‘மெயின்ஸ்ட்ரீம்’ என்னும் பத்திரிகையில் வெளிவந்தது. அடியேனுடைய தமிழாக்கம் சென்னையில் வெளிவந்த ‘பராசக்தி’ என்னும் மாத இரு பத்திரிகையில் (1-12-1965) பிரசுரிக்கப் பட்டது.}
செங்குருதிப் பெருக்கோடும் சீரிமயச் சாரலிலே
மங்குகின்ற கதிரவனின் மாலைநிழல் ஆடுகையில்,
பொங்குதையா மனத்துயரம் போகின்றேன் உயிர்விடுத்தே
பங்கமிலா பெரும்புகழின் பாரதமோ துடிதுடிக்கும்! 1
வெண்பனியும் பெருமழையும் விறைக்கின்ற குளிர்ப்புயலும்
புண்படுத்தும் மலைப்பாதை புரியாத தொல்லையில்லை;
கண்படுக்கா தூர்ந்திடுவோம் கால்நோக்கும் திசையினிலே;
மண்படுக்க எதிரியினை வழிகண்டு சாய்ப்போமே! 2
சமர்தொடுக்க வீரத்தின் சாகஸங்கள் பலப்பலவாம்;
“நமைவெல்ல யாருளராம்?” நகையாடும் எம் கரங்கள்!
குமரரந்தோ நண்பர்கள் குலைந்துவீழத் துடித்தோமே!
அமரராகிப் போர்முனையில் அணையாத பேருற்றார்! 3
இமயத்தின் முகவடிவில் இளங்குருதி எழுத்தாலே
இதயத்தின் வலிமையினால் தாமெடுத்த கடமைதனை
சமயத்தில் முடித்தவரும் சாக்காடு புகுந்திட்டார்;
உமைகாக்க உயிர்கொடுத்த உத்தமராய் ஆகிவிட்டார்! 4
கண்ணயரும் இரவுகளில் களம்காத்து விழிப்புடனே
மண்ணயர்ந்த போதிலுமே மனமயரா துழைத்தவரின்
எண்ணங்கள் நினைவலைகள் இக்களத்தை விட்டேகிக்
கண்மணியின் அன்பகமாம் காதல்தரும் வீடேகும்! 5
தேசத்தின் புகழ்காக்கும் தீரனவன் திரும்புவனோ?
நாசத்திற் கிரையாகி நீங்குவனோ? என்றேங்கும்
ஆசைக்கே ஒருத்தியவள் அன்புமுகம் காணும்;தன்
பாசத்தின் உரிமைகொளும் பெருமக்கள் தமையெண்ணும்! 6
புலம்புகின்ற மலைச்சரிவில் புவியுடலைக் கைவிட்டே
துலங்குகின்ற புகழுடம்பைத் தரிக்கின்ற நேரத்தில்
புலம்புகின்ற என் நெஞ்சம் நினைவாட்டம்;
கலங்குகின்ற உள்ளத்தின் கடையாயிந் நினைவாகும்: 7
இறக்கின்ற மாவீரன் என்னுருவைத் தாய்நாடு
மறக்கின்ற தானாலும் மனந்தளரான்; கடனாற்றி
இறக்கின்ற எனையன்பால் இதுகாறும் காத்துவந்து
துறக்கின்ற உற்றவரைத் துயரின்றிக் காப்பீரே! 8
--- 0 ---
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
24-7-2009
------------------
Thursday, July 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment