Saturday, July 25, 2009

தனிக் கவிதைகள் -- 11

ஆன்ம சக்தி
(23-8-1966)
கவியிற்றிக் காலமெல்லாம் கற்பனைகள் வாழவைத்து,
புவியிடத்துப் பிறப்புற்ற பொய்யுடலின் புன்மைவிட்டே
அவியாத பேரின்பம் அடைந்திடவே விருப்பமுற்றுத்
தவிக்கின்றேன் அருள்கூர்வாய் தயைசிந்தும் பேரொளியே!

சொல்நினைக்கக் கவிவருமாம்; சிந்தைக்குக் குளிர்தரவே
சில்லென்ற தென்றல்போல் சுவைமிக்க இசைவருமாம்;
வெல்கின்ற வீரம்வரும்; வேட்கைவரும்; சாந்திவரும்;
எல்லாமே வருமுன்றன் ஏற்றம்சேர் சக்தியினால்!

எழிலென்றால் உன்னுடைய இளமையெலாம் அடங்கிடுமோ?
பொழில்நடுவே முகையவிழ்க்கும் பொன்மலரே என்பேனோ?
பழிசொல்லும் காலமென்னை பாடாதே நின்னழகு
விழலாகி அழிவுற்றால்; வேண்டுவதோ வேதனையே?

கற்பனையால் பாப்பந்தல் கட்டியதில் உனையமர்த்தி
அர்ப்பணமாய்க் காவியத்தால் அர்ச்சித்தேன் நின்னடியில்;
உட்பதியும் சிந்தனைகள் உன்பெயரின் அம்சங்கள்,
சொற்பித்தன் எனையாக்கும் செயலெல்லாம் உன் திறமே!

உயிரென்பார், ஒளியென்பார்; உண்மையெனும் உருவென்பார்;
பயிர்வளர்க்கும் முகிலென்பார்; பாட்டிசையின் நாத்மென்பார்;
வயிற்றிலுறு பசியென்பார்; வறுக்கின்ற தணலென்பார்;
உயர்தருமென் உள்ளத்தின் ஊற்றேநீ என்பேன்நான்!

சாத்திரங்கள் உரைக்காத சஞ்சீவி அமிர்தம்நீ!
சூத்திரங்கள் உணர்த்தாத சூன்யம்நீ; விஞ்ஞானம்
மாத்திரம்தான் என்னவுன்றன் முகங்காணத் துணிந்திடுமோ?
பாத்திறத்தால் உளம்வெடிக்கப் பார்க்கின்றேன் உனையதிலே!
-- 0 --

என்னைத் தெரியாதா உன்றனுக்கு?

என்னைத் தெரியாதா உன்றனுக்கு? சொல்லிடாய்!
என்றன் இருப்பிடமும் மறந்தாயோ, கிளியே!
உன்னைத் தொட்டும் தொடாமலும் ஒன்றிப்
பின்னியும் பிணையாமலும் பரவிப் படர்ந்தேன்.
விண்ணின் பரப்பும் அணுவின் நுண்மையும்
துண்ணா அளவிட: எண்ணிடு என்னை.
கண்ணில் தெரியும் காட்சியில் உள்ளேன்.
எண்ணிலும் புலப்படா ஏற்றத்து இருப்பேன்.
நெஞ்சும் நினைவும் கண்ணும் பார்வையும்
வஞ்சி! உன் செவியும் கேள்வியும் நாவும்
பஞ்சாம் நாசியும் பளிங்கு மெய்யும்
என்றன் நிலைக்களன்; கோயிலின் வாயில்கள்
உன்றன் கரங்கள் ஏந்திய தீபத்தில்
குன்றா ஒளியில் குடியிருப்பேன் நானே!
காப்பதும் நான் தான்; காற்றால் அதனைத்
தீர்க்க முயல்வதும் நானே! அறிவாய்!
அணையாது தீபம்; உன்னை அழிக்கா தெரித்து
அழிவில்லை, சூடில்லை, குளிரில்லை, நடுக்கமில்லை.
மழைத்துளியில் கரையாய்நீ; மனக்கலக்கம் வேண்டாமே.
மெய்ப்பொருளை உணர்ந்தால் மேதினியில் பயமேது?
கைப்பொருளை விட்டுவிட்டு எங்கெங்கோ தேடுகிறாய்!
உன்னுள் புகவே உரிமையும் திறனும்
என்னில் இலையா? எண்ணாதே, பேசாதே!
உள்ளேயே இருக்கின்றேன், வரவேற்பா எனக்கு?
பிள்ளை மனத்தாலே ‘என்னுலகம்’ என்கின்றாய்;
உனக்காக ஒன்றுமில்லை; உற்றதெல்லாம் என்பொருட்டு.
பிணக்கும் கண்ணீரும் பிறப்பிப்பது நான் தான்!
கற்பனையும் சிந்தனையும் கன்வுகளும் நானே
கற்பித்த விளையாட்டுக் கோலங்கள்! உன்றன்
உறக்கம் விழிப்பெல்லாம் நானிமைத்து மூடு கின்ற
அறுதியிலா இயக்கங்கள்! அழுகையும் புன்னகையும்
நானிட்ட கட்டளைகள்! நின்னிதயம் நான்சமைத்த
சிறுகுடிலே! அதன் துடிப்பு சிறிதெனக்குத் தாலாட்டு!உன்
சிறுகரத்தை இயக்குகின்ற சக்தியெனை நீஅறிவாய்?
வரவேண்டு மென்கின்றாய்; வந்தபின்னும் உறங்குகிறாய்!
நிரவி நிற்கின்றேன் நீஇன்னும் உணரவில்லை!
(பராசக்தி, 15-9-1967 இதழில் வெளியிடப்பட்டது.)
--- 0 ---



உலகப் பேரவையில் உறுதி கொள்வோம்!

(அரசியல் தலைவர், ராஜாஜி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதி ஐக்கிய நாடுகள் சபையில் எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் பாடிய கவிதையின் தமிழாக்கம்.)

நாமிழைத்தத் தீவினைகள் நன்கழிய மன்னித்தே
பூமியிலே நாடுகளும் பூரணமாய் ஒன்றெனவே
சேமமெனும் கூடமிதில் சேர்ந்திருக்க அருளுவனோ?

அழிவுதரும் பகைமையினை ஆண்மையின் அச்சமதை
ஒழித்திடவே உலகமெலாம் ஓங்கும்பேர் அன்புதனை
விழிப்புறவே அறிந்திடுவோம் விண்பரந்த சபையினிலே!

வாளெடுத்துப் போர்தொடுத்து வாழ்விழந்த வல்லவரும்
நாளெதற்கும் பகைவிடுத்து நல்லமைதி நாட்டுமெனத்
தோளிடித்துக் கூறியசொல் நினைவிடிக்கத் தவறியதோ?

இதயத்தில் மறைந்தொளிரும் ஏற்றம்சேர் அணுவினிலே
பதிந்தமகா சக்திதன்னைப் பயன்பெருகச் செயலாக்கி
நிதம்நிலைக்கச் சாந்தியென நெறிகொள்வோம் பேரவையில்!

நாமிழைத்தத் தீவினைகள் நன்கழிய மன்னித்தே
பூமியிலே திசையெங்கும் பூரணமாய்ச் சாந்தியுறச்
சேமமெனும் கூடமிதில் சேரும்நமக் கருளுவனே!
-- 0 --
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
25-7-2009
-----------------

No comments:

Post a Comment