Sunday, July 5, 2009

தாயார்

என்னை ஈன்று குறைவிலாது வளர்த்த எனது தாயார் – இவ்வுலகில் மேலும் இருக்க மனமிலாது – எனது சிறு வயதிலேயே (16-ம் வயதில்) இவ்வுலகை நீத்துச் சென்றுவிட்டாள். …… எங்கே ? …. எங்கே?... என்று நானும் அவளைத் தேடி அலைகின்றேன். ஒவ்வொரு இயற்கை வடிவையும் ஊடுருவிச் சென்று தேடுகின்றேன். என் கண்ணிலே படவே இல்லை. இயற்கையின் எழிலோடு சேர்ந்தாளோ? கடலின் நிற்கா ஒலியோடு சேர்ந்தாளோ? இரும் வானத்து ஒளியிலே கலந்தாளோ? மனிதக் காதலெனும் அன்புக் குழம்பிலே கலந்தாளோ? பெண்மையின் எழில்நடையில் சேர்ந்தாளோ? வண்ண இளம் குழவிதனின் புன்னகையிற் புகுந்தாளோ? வானத்தில் வட்டமிட்டு வேடிக்கை பார்க்கும் இளம் மதிக்குச் சென்றாளோ? எங்கு சென்றாள்? எங்கே? இனி, என் கண்ணெதிரே வந்து காணமாட்டாளோ?....... இப்படித் தவித்த மனத்தில் எழுந்தன பின்வரும் இரு கவிதைகள்:
(1)
எழிலினை இயற்கை கனிந்தது போல
எழில்மிகும் நீயெனை ஈன்றெடுத் தனையோ?
ஐயிரு திங்கள் உயிருன தாலே
தாங்கி என்னை ஈன்றாய் அன்று
ஏங்கும் என்னை இன்று புவியில்
தனியே நிற்க விடுத்தனை யோநீ?
இனியும் என்னால் இயல்வது யாது?
உலகம் என்னை உன்னைக் கேட்டால்
அலற அலறச் செய்தனை யோநீ?
-----

(2) பிரிவாற்றாமை

வாழவகை தெரியவிலை; வழியொன்றும் காணவிலை;
ஆழமாகச் சிந்தைதனை ஆராய்ச்சி செய்துவிட்டேன்!

வருகின்ற காலந்தனை வகுத்திடவே திட்டமிட்டு
உறுகின்ற துன்பத்தை உள்ளத்தில் கொண்டேனே!

அன்பினது பெட்டகமாய் அருள்மிக்க அன்னையிலை!
துன்பமிக உண்டதனால் துயருமிகக் கொண்டுள்ளேன்!

ஆளும்வழி யானறியேன்; ஆகும்செயல் ஒன்றறியேன்;
நாளும்வெகு வேகமாக நீண்டுநீண்டுச் செல்கிறதே!

பாரினிலே காலனுக்குப் பாராரோ யாருமில்லை?
ஆருரைத்தார் காலனுக்கு அவளிடத்து வந்தடைய?

எழிலேந்திப் பொழிவேந்தி எண்ணில்லா மலர்தாங்கி,
வழித்தடத்தில் நிற்கின்றப் பெருமரமே! மெலிகொடியே!

ஆருரைத்தார் வழிதனையே அன்றுவந்த காலனுக்கு?
அறிவீரோ நீங்களெல்லாம்? அறிந்திடில்நீர் உரைப்பீரே!

மண்ணிதனில் உயிரளிக்கும் மறையாத காற்றே,நீ
எண்ணிச்சொல் பதில்தனையே ஒருவார்த்தை உரைப்பாயே!

உலகத்தில் ஓயாது ஓசையிடும் பெருங்கடலே!
நிலத்தினிலே யாராவார்? நீஏதும் கண்டதுண்டோ?


காலையிலே கதிரவனைக் கண்டு மிக ஆர்ப்பரிக்கும்
சோலைக்குயில் களே!நீவிர் சொன்னவரை அறிவீரோ?

மண்ணவர்க்கு உணர்வளிக்கும் மங்காத கதிரொளியே!
எண்ணத்தில் உள்ளவற்றை எடுத்தெனக்கு உரைத்திடுவாய்!

மாலையெனும் போதினிலே மங்கையைப்போல் நாணிவரும்
சோலைதனின் தண்ணொளியே! சொல்லிடுவாய் உன்கருத்தை!

ஒருகுற்றம் மனமாசு ஒன்றுமவள் அறியாதாள்,
உருமாறிப் போனதேனோ? உயிரற்று ஆகியதேன்?

எத்தனையோ நாட்களுமாய் எங்கெங்கோ சுற்றிவந்து
அத்தனையும் கேட்டுவிட்டேன், அவளைத்தான் காணவில்லை!

வாராயோ என்தாயே! வளராதோ உன்பாசம்?
தாராயோ உனதன்பு? தாளிரண்டும் காட்டாயோ?

எங்குதான் சென்றுவிட்டாய்? என்றனுக்குக் கூறாயோ?
அங்குடனே வந்திடுவேன், ஒருவார்த்தை பேசாயோ?
-----
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
ஜூலை 6, 2009

No comments:

Post a Comment