காதல் தத்துவம்
ஊற்றுகள் ஆற்றில் கலக்க
ஆறுகள் கடலில் கலக்க
காற்றெனும் இன்பத் தென்றல்
கூட்டுமே இனிய உணர்வை!
உலகில் உள்ள யாவும்
ஒன்றென் றிருந்த தில்லை;
பொலிந்திடும் நீயும் நானும்
பிறந்தது அதற்கே யாமே!
விண்தனை முத்தம் இடும்பேர்
மலைகள் தம்மைக் காணாய்!
தண்ணளி அலைகள் தாமும்
தழுவிடும் காட்சி பாராய்!
கதிரவக் கதிர்கள் நிலத்தைக்
களிக்கும் அணைத்து; மக்கள்
மதிப்பரோ இவைதனை எனக்குநீ
முத்தம் தாரா தேகில்?
-0-0-
கொடுத்தும், கொன்றனையே!
மண்ணோடு தேய்ந்துலக வழிநடக்கச் செய்தாலும்,
கண்ணோடு கருத்தெல்லாம் கற்பனையும் எழில்தேடி
பண்ணாலே பாடிவைக்கும் பேறெனக்குத் தந்தாலும்
பின்னாலே பறக்காத பாழிறக்கைச் சாபமேனோ?
கொடிபடர மரம்நட்டுக் கோபுரமாய் வளர்வித்து
அடிபாவ உரமிட்டு ஆயிரம்கால பயிர்போல்
துடிப்பான மனதோடு துளிர்க்கொடியை வைத்தாலும்
வடிவழகு நன்மலர்கள் வழங்காது போனதுவேன்?
வானகத்தே ஒண்மலர்கள் வந்துவந்து கண்சிமிட்ட
கானகத்தே கருங்குயில்கள் கனிந்தகுரல் இனிதெழுப்ப
நானகத்தே கொளுமாசை நாகம்போல் சீறியெழ
வீண் அகத்தே இருள்கவ்வி விழலாக்கித் தீர்த்துவிட்டாய்!
சிந்தனைக்கே ஒருமனதைச் சிறப்பெண்ணித் தந்ததனால்
நிந்தனையே அறியாத நாவாலே பாட்டிசைக்க
வந்ததனிப் புகழ்யாவும் வாட்டமுறப் பறித்திட்டாய்;
செந்தழலால் சுட்டெரித்துச் செழும்நாவை அழித்திட்டாய்!
தொட்டதொன்றை அறிந்தறிந்து தொடாததனை உணர்கிறதும்
கிட்டதொன்றை மனம் நினைந்து கிடையாததை விட்டொழித்தும்
பட்டதெல்லாம் உரைக்கின்ற பண்பினையே தந்தாயே;
கெட்டதுவோ உன் எண்ணம்? கொன்றனையே கொடுத்தெல்லாம்!
-0-0-
நீங்காத நினைவானாய்….
நீங்காத நினைவானாய் நின்றாயோ? நின்றாயில்!
தாங்காத இதயத்தில் தனிநடனம் புரிகின்றாய்!
ஏங்காத நாளுண்டோ? என்தொல்லை யாரறிவார்?
பாங்காகக் கதையுரைத்தும் பரிவில்லை கண்டேனே!
பாட்டாக்கி மனம்சுவைக்கப் பலமுறையும் நின்நினைவாய்
ஏட்டாலே அன்புரைக்க எண்ணற்ற கவிதைகளும்
காட்டாறு போல்வந்து காவியமாய் நின்னுருவைத்
தீட்டாத ஓவியமாய்ச் சிலையெழுப்பும் என்மனத்தே!
உள்ளத்தே குடியிருந்து உருவாகும் கற்பனைக்கு
ஒள்ளியதாம் பொருளாகி, ஓர்நிலையில் மயங்கிவிழும்
கள்ளமுதச் சாறாகிக் கவிதைக்கும் உணர்வளித்தாய்,
துள்ளுமிரு கயலேந்தும் தூயமலர்த் தாமரையே!
நன்னாளும் வருமென்றே நனவழிந்த கனவுகளில்
பொன்னான உன்முகமும் பூரிக்கும் புன்சிரிப்பில்
இன்னாகக் கலந்தமுதம் என்னுயிரும் சுவைக்கின்ற
இந்நாளும் மறைந்திடுமோ, இன்னுமொரு சின்னாளில்?
-----0-----
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
13-7-09
----------------
Monday, July 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment