Thursday, July 16, 2009

தனிக் கவிதைகள் -- 5

கவியணங்கு
உள்ளப் பாற்கடலில் உணர்வெனும் மேருவினால்
வெள்ளப் பெருக்கெடுத்து வெண்ணெய்க் கருத்தெழுமே!
அள்ளிப் பருகிடவே ஆடியே வந்திடுவள்
கொள்ளை அழகுடனே கொவ்வைக் கவிக்குமரி!

சீரடித் தளையுடனே செல்வமாம் சொல்லுடனே
ஊரரும் பாவெனவே உண்டிட இனிமையெலாம்
நாரியர் இதழ்களிலே நடந்திட மென்மையெலாம்
சார்தர உலவிவரச் சார்தரும் புகழெலாமே!

வஞ்சியும் அகவலுமாய் வண்ணமார் வெண்பாவும்
நெஞ்சினைத் தழுவிகின்ற நேரொலி கலிப்பாவும்
அஞ்சன நயனத்தாள் அணிந்திடும் பொன்னகையாம்!
எஞ்சுமோ சிலவெழிலும் ஏந்திழை பூண்டிட்டால்?
--0—0—

இன்ப நிலை
வானவெளியே முகில்கூடி
வார்க்குதின்ப மாரி;
போனகுயிலும் மீண்டுகூடிப்
பொழியுதின்ப கானம்;
ஞானவொளியும் உளத்தொளிர
நாடுதின்ப மோனம்;
ஊனைமறந் துள்ளங்கவி
உயிர்படைக்கும் பாரில்!
--0—
உதயம் (வசன கவிதை)
ஆதவன் காலையில் தோன்ற
ஆகிடுமோ உதயமென?
குங்குமச் சேற்றைக் கீழ்வான்
சிவக்கத் தடவினாற் போல்
தங்கப் பரிதியும் எழும்ப
தணியுமோ துன்பவிருள்?
நீ கூறாய்,
நன்னெஞ்சே!
நெடுவானம் வெளுத்ததனால்
நீயும் வெளுத்தனையோ?
நின்றன் பெருமச்சம்
நீங்கியதோ? இருள்போயிற்றோ?
இல்லையில்லை, சிறிதுமில்லை!
பின் என்றாம்?
என்று நீ கவியியற்றி
கனிந்த சுவைதனை
தணிந்து அளிக்கின்றனையோ,
அன்று,
அன்றே, நீயுறுவாய்
இன்பம், உதயம் ஞானம்
எல்லாம்! உன் கீழ்வான்
சிவக்க இருள் ஓடும்;
குயிலின் கீதத் தென்றல்
பரவும்; நீ சிறப்பாய்!
--0--
கற்பனை
கற்பனை என்னும் மாது
காவிலே உலவு கின்றாள்!
வெற்றிச் சுடரே அவளால்
வேட்கை பொங்கும் நெஞ்சில்!

மெல்லிய திரையை விலக்கி,
மோகன முகத்தைக் காட்டி,
நல்லதோர் கீதம் இசைத்து
நெஞ்சம் தன்னை அழைப்பாள்!

நகையாம் முத்தை உதிர்த்து
நெளிந்தே இடையை வளைத்து
குகையாம் நெஞ்சின் இருளை
குலைத்து ஓடச் செய்வாள்!
--0—

இளமை நாட்கள்

இளமை நாட்கள்! இனிய நினைவலை
விளக்கும் நாட்கள் வந்தெனை மீண்டும்
மகிழச் செய்திட முயலுமோ? முடியுமோ?
துகிலும் கொடியெனக் காற்றில் பறக்க
தூவும் அவள்தன் தூயதாம் எழிலை
அவளே அவளே அன்றென் நெஞ்செனும்
மொட்டும் மலர்ந்திட மகிழ்ச்சியை ஊட்டுவள்!
--0—
சாகுந்தலம்
(ரவீந்திர நாத் டாகுர் எழுதிய ஆங்கிலக் கவிதையின் தமிழ்வடிவம்)
இளமையின் மலர்ச்சி யோடு
முதுமையின் கனிவும் ஏந்தி,
உளந்தனை மயக்கி இன்ப
உணர்விலே ஆழ்த்தி உண்ண
அளித்திடும் யாவும், என்றும்
அழிவிலா விண்ணும் மற்றிந்
நிலையிலா மண்ணும் சேரும்
நாமமே சாகுந் தலமாம்!
--0--

கவிஞன்
எண்ணம்:
ஆற்றல் பெற்றார் -- மன
ஊற்றி லோர்கவி – வந்து
ஆற்றும் என்னைத் தேற்றும்.

உள்ளம்:
தாரித் திருப்பேன் -- உளக்
கோரிக் கையோ -- எனை
ஊறித் திளைத்தே ஆர்க்கும்!

நினைவு:
பாவிலே ஒலிக்கும் -- இனிய
காவிலே அலரும் -- எழிற்
பூவிலே கையோ தாவும்!

கனவு:
நாணித் தவித்து -- இதழ்
கோணி விரிக்கும் -- அதில்
காணும் மலர்முகம் நாணும்!
வாரித் தூவும் -- இன்ப
மாரி வானில் -- அந்த
நாரி என்னைச் சாரும்!
மானின் விழிகள் -- முத்
தீனும் இதழ்கள் -- அணுகின்
நாணும் இடையும் தானே!

உண்மை: (குலைவு):
கண்ணைத் திறந்து -- ஒளி
விண்ணை நோக்க -- இது
மண்ணே என்றுளம் எண்ணும்!
--0—

புத்தாண்டு

புத்தாண்டு வருகுதிந்தப்
பூவுலகிலே
எத்தனைநல் சேதிகளை
எடுத்து வருகுதோ?
நித்தியமும் வருந்துன்பம்
நீங்கித் தொலையுமோ?
செத்த இன்ப வாழ்வுமீண்டும்
சோதி பெறுமோ?

நெஞ்சத்தில் கற்பனையும்
நீண்ட கவிதையில்
மஞ்சுமிகப் பொங்கிடவே
மலர்ந்து மணக்குமோ
அஞ்சியஞ்சி வாழுகின்ற
அழகுக் கவிதைகள்
நெஞ்சினிலே தோன்றியின்ப
நிலையை நாட்டுமோ?
--0—
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
16-7-09
---------------

No comments:

Post a Comment