Tuesday, July 28, 2009

கலியன் புரிந்த அருள்

இந்த பாசுரங்கள் இரண்டு வாரங்களுக்கு முன் எழுதப் பெற்றவை.

-------------


கலியன்மேல் காதலினால் கலியனது திருமொழியை
வலிகொண்டு ஊக்கத்தால் வெறிகொண்டு படித்திட்டேன்;
ஒலிநயத்து மூழ்கியதால் ஒன்பதெனும் திருமொழியின்
வலிச்சுழலில் அகப்பட்டு; மீளாது மூழ்கிட்டேன். 1

திருமலையில் குடிகொண்ட தேவனிடம் ஆட்பட்டே
அருசுவையாம் பாசுரத்தில் ஆழ்ந்திழந்தேன் என்மனத்தை;
இருந்தவிடம் மறந்தொழிந்தேன்; இரைந்திரைந்து பாடலுற்றேன்;
ஒருசொல்லும் எனைவிட்டு ஓடாமல் ஒட்டியதே. 2

தாய்தந்தை முதலாகத் தாரமெனும் சொந்தமெலாம்
நோய்களையே தருவனவாய் நலிவடையச் செய்ததெலாம்
நாய்போன்ற என்றனது நினைவினிலே தோன்றினவே;
பாய்கின்ற நதிபோல பாக்களைநான் படித்துவந்தேன்! 3

பெண்களெனும் வலையில்நான் பட்டபெரும் துன்பமெலாம்
கண்ணெதிரே நிறுத்திட்டார் கலியனெனும் நல்லாழ்வார்!
உண்மையிலே இரக்கமின்றி ஒருவருக்கும் நற்செயலை
எண்ணாது இருந்ததனால் இவ்வாழ்வை வீணடித்தேன்! 4

இப்பிறப்பில் நிகழ்ந்ததெலாம் இப்படியெனில் என்றனது
முப்பிறப்பில் எந்நலனும் முயலாமல் இருந்திருப்பேன்!
அப்படியே செய்தவனாய் ஆகிலுமென் நலம்தனையே
தப்பாமல் மனத்திருத்தி நல்வணிகம் செய்திருப்பேன்! 5

சுயநலமே மனத்திருப்பத் திருவேங்கடத் தானையேநான்
நயந்தவனாய் ஒருநாளோ நொடியினிலோ எனதுளத்தில்
பெயரொன்றை எண்ணிடவோ பணிந்தவனை வணங்கிடவோ
முயலாமல் வாழ்வெல்லாம் முடித்திருப்பேன் ஐயமில்லை! 6

மண்ணாலும் நீராலும் மஞ்சுலாவும் இடத்தாலும்
பண்ணியவென் ஆக்கைகளைப் பலவெடுத்தும் புரிந்தேனா
புண்ணியங்கள்? அல்லவல்ல; பாவங்களே செய்திருப்பேன்!
எண்ணங்கள் இப்படியே என்மனத்தில் எழுந்தனவே! 7

கலியனது பாவரிகள் கற்களென ஊன்றிடவும்
செலத்தொடங்கி நடந்திட்டேன் நீள்வழியே; ஓரிடத்தில்
நலம்கேட்டு எனைநிறுத்தி நயமுடனே யாரோஓர்
நலமனிதர் பேசுகையில் நானுரைத்தேன் எனைப்பற்றி! 8

வயதாகிப் போனதனால் வசதியுள இடமொன்றை
விழைந்தடியேன் தேடிலுமே வீணான என்றனது
முயற்சியினைத் தெரிவித்தம் மனிதரைநான் பார்த்துநின்றேன்;
வியப்புடனே எனைப்பார்த்து வலிந்தவரே சொன்னாரே! 9

‘வேறெங்கு போயிடணும், விரையார்திரு மலையிருக்க?
நாறுமலைத் தாழ்வரையில் நிலைகொண்ட அலர்மங்கை
ஊரிலேஓர் அமைப்புளது! உமக்கேற்கும் நன்றாக!
சேருமங்கே!’ என்றுசொல்லி நகர்ந்துபோனார் அம்மனிதர்! 10

யாராரோ பிடித்தேநான் அவ்விடத்தை அறியலுற்றேன்;
நேரத்தைச் செலவிடா தங்கேநான் ஏகினனே;
சீருடனே இயங்கிவரும் நல்லமைப்பைக் கண்ணுற்றேன்;
வாருமென அன்புடனே வரவேற்றார் அடியனையே! 11

இன்றிருக்கும் வீட்டினுக்கோர் ஏற்பாடு செய்துவிட்டு
என்றேனும் ஒருநாள்யான் ஏழுமலை அடிவாரம்
சென்றிடலாம் என்றெல்லாம் செழுங்கனவு பன்னாட்கள்
நன்றுகண்டும் அக்கனவு நனவடையா தாயிற்றே! 12

அவ்வமைப்பில் தங்கியபோ தரியதொரு வாய்ப்புதனால்
செவ்வியசீர் மலைசென்று தேவனுடை தரிசனமே
பவ்வியமாய்க் கிட்டியதால் பெருமகிழ்ச்சி உற்றேன்நான்!
அவ்வளவே அண்டியது! அதன்பின்னர் வேதனையே! 13

என்வீட்டை ஏதும்செய இயலாமல் தொடர்ந்ததுவே
என்வாழ்வு தனிமையிலே; எத்தனையோ நாட்களுந்தான்
தன்னாகக் கழிந்திடவே திருப்பதிக்குச் செலும்வாய்ப்பு
என்னைவிட்(டு) அகன்றதுவே ஏதேதோ சிந்தைகளால்! 14

என்வீட்டில் தனிக்காவல் கைதியைப்போல் இருந்தபோது
என் தெய்வம் மலையப்பன் என்வீட்டில் நுழைந்திட்டான்!
என்னெதிரே தொலைக்காட்சிப் பெட்டிதனுள் பாங்காக
வந்துவந்து செல்கின்றான், மலையினிலே வீற்றிருந்தே! 15

கிட்டத்தில் வந்துநின்று களைநிறைந்த தன்முகத்தைத்
தொட்டிடவே அழைப்பான்போல் துணிந்தவனே காட்டுகின்றான்!
பட்டாடை நடுவினிலே பளிச்சென்று தன்கரத்தை
விட்டொழிப்பாய் கவலையென வலிந்தவனே நீட்டுகின்றான்! 16

“விண்ணோர்தொழும் வேங்கடமே வெகுதொலைவில் இருந்தாலும்
நண்ணியுன்னை நான்நாடி நெருக்கமுடன் உன்வீட்டின்
முன்னறையில் நின்றுகொண்டு மறவாமல் அனுதினமும்
எண்ணற்ற முறையென்றன் எழிற்சேவை காட்டுகின்றேன்! 17

மலையடிக்கீழ் வாழ்வதனால் மீளமீள எனைநேரில்
வலியிலாமல் அண்டியனாய் நெடுநேரம் காண்பாயோ?
அலைபாயும் கூட்டத்தில் அங்கெங்கே எனைக்காண்பாய்?
சிலநொடிகள் காண்பதற்கே செலவாகும் பலநாட்கள்! 18

நானிலாத இடமுண்டோ? நானிலாத நொடியுண்டோ?
நானிலாத நினைவெல்லாம் நன்றாக அமைந்திடுமோ?
நானிலாத செயல்பாடும் நலமாக நடந்திடுமோ?
நானிலாது நீயுளயோ? நெருங்கியுளேன் உணராயா? 19

இருப்பிடமே வைகுண்டம் எனையேநீ நினைத்தாயேல்!
இருப்பிடமே திருமலையாம், என்‘சானல்’ பார்த்தாயேல்!
இருக்குமிடத் திருந்திட்டால் எனையேநான் தருகின்றேன்!
வருத்தமுண்டோ என்னடியை நீவிடாமல் நினைத்திட்டால்? 20

என்னைநினை! அன்புடனே எனைப்பூசி! எனைவணங்கு!
என்னுடனே சேர்ந்திருப்பாய்! எனைவிடுத் தகலாமல்
என்னிடமுன் மனம்வைத்தால் எனைக்காண்பாய் எங்கெங்கும்!
என்னில்நீ இருந்தாயேல், என்னிடமாய் உனைக்கொள்வேன்!” 21

இத்தனையும் அவன்சொல்ல எடுத்துரைப்பர் வல்லுநர்கள்
எத்தனையோ முறைகள்தாம் என்முன்னே எழுந்தருளி
பத்தியினைப் புகட்டுவர்கள்! புவிதனிலே இதைவிடவே
மெத்ததென ஒன்றுளதோ? மெய்கண்டேன் மெய்தானே! 22

-- 0 --

அன்புடன்
தாஸன்
அன்பில் எஸ். ஸ்ரீனிவாஸன்

28-7-2009

Sunday, July 26, 2009

தனிக் கவிதைகள் -- 12

பிறையாகிப் போனதுவேன்?

வட்ட நிலா உன்னைவெட்டி வதைத்தவரும் யாரோ?
எட்ட முடி யாதவுனைத் தொட்டவர்தான் எவரோ? (வட்ட)

கள்ளமிருள் சூழ் உலகில் கலங்காதே என்பதுபோல்
உள்ளமுரு துயர்துடைக்க உலவிவந்தாய் முழுநிலவாய் (வட்ட)

நல்லகவி கற்பனைகள் நீஎனெக்குத் தந்ததெல்லாம்
இல்லையென ஆகியதே; இனியெங்கே நான் செல்வேன்?
அல்லிமலர் விரிந்திடுமோ? அலைகடலின் இசைவருமோ?
சொல்லெனது நாவருமோ? சுகம்வருமோ சொல்பிறையே! (வட்ட)

காதலினால் பிரிவுற்ற கன்னியவள் தவிக்கின்ற
வேதனைக்கே அளவிலையோ? வெம்மையென எரிக்கின்றாய்!
காதம்பல நடந்ததனால் இளைத்தாயோ ஒருபாதி?
நீதந்த குளிர்மையிலே உருகியதோ உன்னுருவம்? (வட்ட)

பாலூட்ட குழந்தைக்கே பாட்டுசொல்ல என்செய்வேன்?
தாலாட்டி உனைக்காட்ட தங்கநிலா உருவெங்கே?
காலத்தின் பாதையிலே கரைந்தாயோ ஒருபாதி?
ஞாலத்தின் இருளுன்னை நஞ்சாகக் கருக்கியதோ? (வட்ட)

பிறையாகிப் போனதுவோர் பெருமுனிவன் சாபமதோ?
குறையாகிப் போனதுவேன் கோலமுறு கவிமலர்கள்?
வரையாத ஓவியன்கை வண்ணமுனை வளைத்ததுவோ?
இரையாக அரவமுனை அரையாக்கித் தீர்த்ததுவோ? (வட்ட)
-- 0 --

எது முன்னேற்றம்? ---- கல்வி!
(சென்னை வனொலியில் இக்கவிதை ஒலிபரப்பப் பட்டது.)

வள்ளுவனும் இளங்கோவும் மாகவிஞன் கம்பனுமே
துள்ளுகவி இலக்கியங்கள் தந்த நாடிதுவாம்!
கல்தோன்றி மண்தோன்றாக் காலம் முதலாய்
நற்றமிழும் நடைபயின்ற நங்கையெனப் போற்றுகிறோம்!

கற்பதே தருக்களெனக் கல்விக் கூடங்களும்
சொல்பயின்று பொருள்பயின்ற ஞானப் பேறுடைந்து
ஊன்மறைந் தாலும் உற்றபுகழ் மறையாமல்
நூலுருவாய் வாழ்ந்தவரும் நல்லறி வாளர்களும்
மல்கிய நாடென்றே மார்தட்டிக் கொள்கின்றோம்!
கல்வியிலே முன்னேறி கற்பதெல்லாம் கற்றோமா?
ஆக்கப் பொருளெல்லாம் அறிந்து சிறந்தோமா?
தேக்கத்தில் சுழலாமல் திசையறிந்து வந்தோமா?
காலப் பெருவெள்ளம் கடிதே செல்கிறதே,
ஞாலத்தில் உள்ளதெல்லாம் நன்கே அறிந்தோமா?
அணுத்துளைத்துப் போர்புரிய அழகாகக் கற்றோமே
ஆள்துளைக்கும் துயரதனை, அறியாமைப் பேயை
பஞ்சக் கொடுமையினை பிணியின் நஞ்சுதனை
விஞ்சி அறிவாலே விரட்டி அடித்தோமா?
அகரம் முதலாக அருங்கலைகள் கற்றுணர்ந்து
அகன்றதுவாய் உளம்விரிந்து ஆற்றத் தொடங்குமுனம்
வீட்டுத் தொல்லையினால் விடுத்தே ஏகுகிறான்;
நாட்டமெல்லாம் தொழிலொன்றை நடத்திப் பிழைப்பதுதான்!
பள்ளியிலே படித்தவைப் பறந்தோடிப் போயிடவும்
உள்ளம் விரிவின்றி உயரும் அறிவின்றி
பள்ளத்தில் உழன்று பொய்வாழ்வு வாழ்கின்றான்.
மாதத்தின் முதல்தேதி; மனம்மகிழத் திரைப்படமும்;
வீதியிலே நிகழ்த்துகின்ற வெறுமை அரட்டைகளும்
தானுற்ற பேறனவே தனித்தபெரு வாழ்வெனவே
தானுந்தன் மனைமக்கள் தமமையனைத்தும் அதேகதியில்
போக்குகின்ற வாழ்வும் ஓர் புவனத்து வாழ்வாமோ?
நீக்கி மனவிருளை நிலைக்கும் அறிவொளியை
ஏற்றாத கல்வியினால் என்பயனாம்? என்பயனாம்?
வற்றாத அறிவென்னும் நல்லூற்றைப் பேணி
ஆவலும் அதிசயமும் சாவாமல் உள்ளத்தில்
விஞ்ஞானம் நுட்பவியல் விந்தையிலே ஆர்வமுடன்
எஞ்ஞான்றும் பயில்வதிலே ஈடுபாடும் துடிதுடிப்பும்
கூடிவிட எழுப்புதலே கல்விக்கு அழகாம்!
தேடி அறிகின்ற தேர்ந்த மனப்பாங்கை
வார்க்கின்ற கல்வியே வளர்ச்சிக்கு அடையாளம்!
யார்க்கும் பயனற்ற யந்திர உலகத்தில்
தாவிப் புகுந்துவிட ஓர்படியாய் இல்லாமல்,
பாவி மொழிவெறியை, பிரதேச வெறிக்கனலை,
அடுத்தவன் பசியாலே அல்லலுறும் போதிலும்
விடுக்காத சுயநலத்தை, வீண்பேச்சு ஏசல்களை,
அறிவுச் சோகையினை, குறிக்கோளே இல்லாத
குழப்பத்தை, மனவிருளை கூட்டாத கல்விவேண்டும்.
மொழியிலே அத்தனையும் முற்றுமுளக் கலைகளையும்
வாழ்க்கைப் பண்புகளை, வானம்போல் இதயத்தை,
ஆழ்ந்த ஞானந்தான் அவனியிலே பெரிதெனவே
தெளிவாக்கும் எண்ணத்தைத் தளிரவே செய்திடுமேல்
புகட்டும் கல்விக்கோர் நிகரில்லை யாமே!
உணர்ச்சிக்கு அடிமையாகி, ஊரழிய பேரழிய
பணத்தைச் சேர்த்துவைத்துப் பகட்டாக வாழ்கின்ற
புன்மையினை நன்குணர்த்திப் புகட்டுவது நற்கல்வி!
நன்மையெல்லாம் பெற்று நாடெல்லாம் மேன்மைகொள
வையத்து மக்களெல்லாம் உய்யச் செயலாற்றும்
பக்குவத்தை, கடலெனவே பரந்த கண்ணோக்கைத்
தக்கபடி உருவாக்கும் தரம்மிக்க கல்விதான்
முன்னேற்றப் பாதைக்கு வழிகாட்டும் விளக்காகும்;
எந்நேரமும் ஒளிகுன்றா உன்னத தீபமதே!

பண்டைப் பழங்கதையின் பெருமையை ஓயாது
தொண்டை கிழியத் தோற்றுவதை விட்டொழித்துப்
புத்தறிவை நாடும் புதுவிழிப்பைப் பெறுவோம்!
கற்றியும் ஆற்றலினைக் கரையாது காப்போம்!
எத்திசையும் அறிவுச்சுடர் எட்டி இருளகற்ற
மெத்த கல்விதரும் மேன்மையைப் பெறுவோம்!
-- 0 --
திருமண வாழ்த்து

இன்பப் பொழுதென இக்கண மானதே
இசையால் எனைநீ மகிழ்விக் காயோ (இன்ப)

அன்புப் பெரியவர் ஆசை பெருகிடவே
ஆனந்தம் கொள்ளும் நம்மணக் கோலத்தால் (இன்ப)

திருக்கரம் பற்றநீ கண்ட கனவுகள்
உருவெடுத்த உவகை நிலையிதுவோ
இருவராய் நின்றதன் வகையும் மாறி
ஒருமனத் தவராய் ஒருநிலை எய்திய (இன்ப)
--- 0 ---
நினைவில் நிற்கின்றய்!
நினைவெல்லாம் ஊடுருவி நிற்கின்றாய்
எனையகத்தே பாலிக்கும் அன்பே! என் (நினை)
கணந்தோறும் அகலாது கற்பனைகள் கூட்டுவித்து
மணிக்கவிதை முத்துக்கள் அணிசெய்ய வருகின்றாய் (நினை)
வானகத்தே வதிசெய்யும் வளர்திங்கள் பொருள்கொள்ளும்
தேனகத்தே மல்குமெழில் தாமரையும் பொருள்கொள்ளும்
யானகத்தே பொருள்கொண்ட ஞானமெல்லாம் உருவெடுத்து
நாணிஎதிர் வரும் உன்னால் நடை அன்னம் பொருள்கொள்ளும்! (நினை)
-- 0 --
திருமண ஊஞ்சல் பாட்டு
ஆடாய், ஊஞ்சல் நீ ஆடாய்! (ஆடாய்)
நீடிய கண்ணாள் திருவுடனே
நீல ஒளிவீசும் அழகுடனே (ஆடாய்)
நாடும் நகரமும் சுற்றமெல்லாம்
நற்களிப் பெய்திட நயமாகவே நீ (ஆடாய்)
அழகும் பண்பும் சேர்ந்திருக்கையில்
அன்பின் அருளும் கூடியிருக்கையில் (ஆடாய்)
பழகும் இன்சுவைப் பண்ணிசைத்தே
பணிகின்ற அடியார்கள் வாழ்ந்திடவே (ஆடாய்)
-- 0 --
திருமண வாழ்த்து
அன்பும் திருவும் அறிவின் ஒளியின்
பண்பாம் சிறப்பும் பொருந்த நீவிர்
இன்பம் சேர இனிது வாழ்வீர்
அன்பன் நாரணன் அருளின் மேன்மையால்!
-- 0 --
நிலவைக் கண்டு…
நிலவை நீயென்று எண்ணி
நீள் கரம் நீட்டி
மலரெனப் பிடிக்கச் சென்று
மனம் பேதலித் தேனே -- உன்றன்
கோல உருவம் என்றன்
குகை மனத்தில் ஒளிக்கக்
கால உருவம் அழிந்து -- நான்
களிப்பில் மூழ்கி நின்றேன்
தேனின் சுவைப் பேச்சும்
தெளிந்த முகப் பாங்கும்
வானின் வளைவு இமையும் -- எல்லாம்
வளர்க்கும் இன்ப போதை
ஆடி வரும் நின் நடையும்
அரவம் போலுன் சடையும்
தேடி வருகின்ற கண்ணும் -- என்னைத்
திக்கு முக்காடப் பண்ணும்
-- 0 --
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
26-7-2009
-------------

Saturday, July 25, 2009

தனிக் கவிதைகள் -- 11

ஆன்ம சக்தி
(23-8-1966)
கவியிற்றிக் காலமெல்லாம் கற்பனைகள் வாழவைத்து,
புவியிடத்துப் பிறப்புற்ற பொய்யுடலின் புன்மைவிட்டே
அவியாத பேரின்பம் அடைந்திடவே விருப்பமுற்றுத்
தவிக்கின்றேன் அருள்கூர்வாய் தயைசிந்தும் பேரொளியே!

சொல்நினைக்கக் கவிவருமாம்; சிந்தைக்குக் குளிர்தரவே
சில்லென்ற தென்றல்போல் சுவைமிக்க இசைவருமாம்;
வெல்கின்ற வீரம்வரும்; வேட்கைவரும்; சாந்திவரும்;
எல்லாமே வருமுன்றன் ஏற்றம்சேர் சக்தியினால்!

எழிலென்றால் உன்னுடைய இளமையெலாம் அடங்கிடுமோ?
பொழில்நடுவே முகையவிழ்க்கும் பொன்மலரே என்பேனோ?
பழிசொல்லும் காலமென்னை பாடாதே நின்னழகு
விழலாகி அழிவுற்றால்; வேண்டுவதோ வேதனையே?

கற்பனையால் பாப்பந்தல் கட்டியதில் உனையமர்த்தி
அர்ப்பணமாய்க் காவியத்தால் அர்ச்சித்தேன் நின்னடியில்;
உட்பதியும் சிந்தனைகள் உன்பெயரின் அம்சங்கள்,
சொற்பித்தன் எனையாக்கும் செயலெல்லாம் உன் திறமே!

உயிரென்பார், ஒளியென்பார்; உண்மையெனும் உருவென்பார்;
பயிர்வளர்க்கும் முகிலென்பார்; பாட்டிசையின் நாத்மென்பார்;
வயிற்றிலுறு பசியென்பார்; வறுக்கின்ற தணலென்பார்;
உயர்தருமென் உள்ளத்தின் ஊற்றேநீ என்பேன்நான்!

சாத்திரங்கள் உரைக்காத சஞ்சீவி அமிர்தம்நீ!
சூத்திரங்கள் உணர்த்தாத சூன்யம்நீ; விஞ்ஞானம்
மாத்திரம்தான் என்னவுன்றன் முகங்காணத் துணிந்திடுமோ?
பாத்திறத்தால் உளம்வெடிக்கப் பார்க்கின்றேன் உனையதிலே!
-- 0 --

என்னைத் தெரியாதா உன்றனுக்கு?

என்னைத் தெரியாதா உன்றனுக்கு? சொல்லிடாய்!
என்றன் இருப்பிடமும் மறந்தாயோ, கிளியே!
உன்னைத் தொட்டும் தொடாமலும் ஒன்றிப்
பின்னியும் பிணையாமலும் பரவிப் படர்ந்தேன்.
விண்ணின் பரப்பும் அணுவின் நுண்மையும்
துண்ணா அளவிட: எண்ணிடு என்னை.
கண்ணில் தெரியும் காட்சியில் உள்ளேன்.
எண்ணிலும் புலப்படா ஏற்றத்து இருப்பேன்.
நெஞ்சும் நினைவும் கண்ணும் பார்வையும்
வஞ்சி! உன் செவியும் கேள்வியும் நாவும்
பஞ்சாம் நாசியும் பளிங்கு மெய்யும்
என்றன் நிலைக்களன்; கோயிலின் வாயில்கள்
உன்றன் கரங்கள் ஏந்திய தீபத்தில்
குன்றா ஒளியில் குடியிருப்பேன் நானே!
காப்பதும் நான் தான்; காற்றால் அதனைத்
தீர்க்க முயல்வதும் நானே! அறிவாய்!
அணையாது தீபம்; உன்னை அழிக்கா தெரித்து
அழிவில்லை, சூடில்லை, குளிரில்லை, நடுக்கமில்லை.
மழைத்துளியில் கரையாய்நீ; மனக்கலக்கம் வேண்டாமே.
மெய்ப்பொருளை உணர்ந்தால் மேதினியில் பயமேது?
கைப்பொருளை விட்டுவிட்டு எங்கெங்கோ தேடுகிறாய்!
உன்னுள் புகவே உரிமையும் திறனும்
என்னில் இலையா? எண்ணாதே, பேசாதே!
உள்ளேயே இருக்கின்றேன், வரவேற்பா எனக்கு?
பிள்ளை மனத்தாலே ‘என்னுலகம்’ என்கின்றாய்;
உனக்காக ஒன்றுமில்லை; உற்றதெல்லாம் என்பொருட்டு.
பிணக்கும் கண்ணீரும் பிறப்பிப்பது நான் தான்!
கற்பனையும் சிந்தனையும் கன்வுகளும் நானே
கற்பித்த விளையாட்டுக் கோலங்கள்! உன்றன்
உறக்கம் விழிப்பெல்லாம் நானிமைத்து மூடு கின்ற
அறுதியிலா இயக்கங்கள்! அழுகையும் புன்னகையும்
நானிட்ட கட்டளைகள்! நின்னிதயம் நான்சமைத்த
சிறுகுடிலே! அதன் துடிப்பு சிறிதெனக்குத் தாலாட்டு!உன்
சிறுகரத்தை இயக்குகின்ற சக்தியெனை நீஅறிவாய்?
வரவேண்டு மென்கின்றாய்; வந்தபின்னும் உறங்குகிறாய்!
நிரவி நிற்கின்றேன் நீஇன்னும் உணரவில்லை!
(பராசக்தி, 15-9-1967 இதழில் வெளியிடப்பட்டது.)
--- 0 ---



உலகப் பேரவையில் உறுதி கொள்வோம்!

(அரசியல் தலைவர், ராஜாஜி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதி ஐக்கிய நாடுகள் சபையில் எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் பாடிய கவிதையின் தமிழாக்கம்.)

நாமிழைத்தத் தீவினைகள் நன்கழிய மன்னித்தே
பூமியிலே நாடுகளும் பூரணமாய் ஒன்றெனவே
சேமமெனும் கூடமிதில் சேர்ந்திருக்க அருளுவனோ?

அழிவுதரும் பகைமையினை ஆண்மையின் அச்சமதை
ஒழித்திடவே உலகமெலாம் ஓங்கும்பேர் அன்புதனை
விழிப்புறவே அறிந்திடுவோம் விண்பரந்த சபையினிலே!

வாளெடுத்துப் போர்தொடுத்து வாழ்விழந்த வல்லவரும்
நாளெதற்கும் பகைவிடுத்து நல்லமைதி நாட்டுமெனத்
தோளிடித்துக் கூறியசொல் நினைவிடிக்கத் தவறியதோ?

இதயத்தில் மறைந்தொளிரும் ஏற்றம்சேர் அணுவினிலே
பதிந்தமகா சக்திதன்னைப் பயன்பெருகச் செயலாக்கி
நிதம்நிலைக்கச் சாந்தியென நெறிகொள்வோம் பேரவையில்!

நாமிழைத்தத் தீவினைகள் நன்கழிய மன்னித்தே
பூமியிலே திசையெங்கும் பூரணமாய்ச் சாந்தியுறச்
சேமமெனும் கூடமிதில் சேரும்நமக் கருளுவனே!
-- 0 --
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
25-7-2009
-----------------

Thursday, July 23, 2009

தனிக் கவிதைகள் -- 10

வாடும் மலர் நான்

வாழ்வென்னும் சோலையிலே
மலரென நான் பூத்து
வாடிடுமுன்னே நீ வாராயோ
-- நீ -- வாராயோ (வாழ்)

ஊழ்வினையின் சோதனையோ
உள்ளத்தின் வேதனையோ
உன் நினைவின் சோகமெனை உருக்கிடவே
-- எனை -- உருக்கிடவே (வாழ்)

காதலெனும் மணமிட்டுக்
காத்திருக்க எனைவத்தாய்!
காலமெலாம் உனையெண்ணிக் காணாமல்
--- உனைக் -- காணாமல் (வாழ்)

சாதலெனும் புயலென்னைத்
தழுவிடவே வருமுன்னே
தாவி நீ வாராயெனத் தவிப்பேனே
--- நான் -- தவிப்பேனே (வாழ்)
-- 0 --

ஓடிவா!
ஓ……ஓடிவா --- நீ
ஓ……ஓடிவா (ஓடிவா)

ஓடாமல் நின்றுவிட்டால் – நீ
ஓடாமல் நின்றுவிட்டால் -- என்
உள்ளமும்தான் நின்றுவிடும் -- நீ (ஓடிவா)

சூடாத மாலையேந்த -- நீ
சூடாத மாலையேந்த
சோபையெல்லாம் உன்னையேந்த – நீ (ஓடிவா)

நீளாத இரவு உன்னை
நெகிழ்த்திட வில்லையா?
தாளாத என் துயரம்
தணிந்திடவே இங்கே நீ (ஓடிவா)

மீட்டாத வீணையின்ப
மெல்லிசையும் கொடுத்திடுமோ
தீட்டாத ஓவியம் தான்
சீருடைத்தோ என்றெண்ணி -- நீ (ஓடிவா)
-- 0 --
தனிமை
தனிமையில் வாடி
தண்மையிலா தோடி
இனிமையும் இன்பமும் இணையா நாளாய்
எனவானதுவே எனதிந்த வாழ்வே!

உன் நினைவே துணையாய்
உன்குரலே இசையாய்
உன்முகமே பொன்னொளிர் மதியாய்
என்வாழ்வே உலகாய் ஆனதுவே!

மதுவுள்ள மலராய்ப்
புதுமையின் எழிலாய்
மெதுவாய்த் தவழ்ந்து மேவுமின் நதியாய்
வதிந்தாய் என்மனதில் வளர்ந்தாய் நீயே!
-- 0 --

மா வீரனின் மரண சாஸனம்
{1965-ம் ஆண்டில், பாகிஸ்தானுடன் நடந்த போரில் வீர மரணம்
எய்திய லெப்டினண்ட் கர்னல் என். என். கன்னா, இறப்பதற்குச்
சில தினங்களுக்கு முன் எழுதி வைத்த அழகிய ஆங்கிலக் கவிதையின் மொழிபெயர்ப்பு இது. ‘மெயின்ஸ்ட்ரீம்’ என்னும் பத்திரிகையில் வெளிவந்தது. அடியேனுடைய தமிழாக்கம் சென்னையில் வெளிவந்த ‘பராசக்தி’ என்னும் மாத இரு பத்திரிகையில் (1-12-1965) பிரசுரிக்கப் பட்டது.}

செங்குருதிப் பெருக்கோடும் சீரிமயச் சாரலிலே
மங்குகின்ற கதிரவனின் மாலைநிழல் ஆடுகையில்,
பொங்குதையா மனத்துயரம் போகின்றேன் உயிர்விடுத்தே
பங்கமிலா பெரும்புகழின் பாரதமோ துடிதுடிக்கும்! 1

வெண்பனியும் பெருமழையும் விறைக்கின்ற குளிர்ப்புயலும்
புண்படுத்தும் மலைப்பாதை புரியாத தொல்லையில்லை;
கண்படுக்கா தூர்ந்திடுவோம் கால்நோக்கும் திசையினிலே;
மண்படுக்க எதிரியினை வழிகண்டு சாய்ப்போமே! 2

சமர்தொடுக்க வீரத்தின் சாகஸங்கள் பலப்பலவாம்;
“நமைவெல்ல யாருளராம்?” நகையாடும் எம் கரங்கள்!
குமரரந்தோ நண்பர்கள் குலைந்துவீழத் துடித்தோமே!
அமரராகிப் போர்முனையில் அணையாத பேருற்றார்! 3

இமயத்தின் முகவடிவில் இளங்குருதி எழுத்தாலே
இதயத்தின் வலிமையினால் தாமெடுத்த கடமைதனை
சமயத்தில் முடித்தவரும் சாக்காடு புகுந்திட்டார்;
உமைகாக்க உயிர்கொடுத்த உத்தமராய் ஆகிவிட்டார்! 4

கண்ணயரும் இரவுகளில் களம்காத்து விழிப்புடனே
மண்ணயர்ந்த போதிலுமே மனமயரா துழைத்தவரின்
எண்ணங்கள் நினைவலைகள் இக்களத்தை விட்டேகிக்
கண்மணியின் அன்பகமாம் காதல்தரும் வீடேகும்! 5

தேசத்தின் புகழ்காக்கும் தீரனவன் திரும்புவனோ?
நாசத்திற் கிரையாகி நீங்குவனோ? என்றேங்கும்
ஆசைக்கே ஒருத்தியவள் அன்புமுகம் காணும்;தன்
பாசத்தின் உரிமைகொளும் பெருமக்கள் தமையெண்ணும்! 6

புலம்புகின்ற மலைச்சரிவில் புவியுடலைக் கைவிட்டே
துலங்குகின்ற புகழுடம்பைத் தரிக்கின்ற நேரத்தில்
புலம்புகின்ற என் நெஞ்சம் நினைவாட்டம்;
கலங்குகின்ற உள்ளத்தின் கடையாயிந் நினைவாகும்: 7

இறக்கின்ற மாவீரன் என்னுருவைத் தாய்நாடு
மறக்கின்ற தானாலும் மனந்தளரான்; கடனாற்றி
இறக்கின்ற எனையன்பால் இதுகாறும் காத்துவந்து
துறக்கின்ற உற்றவரைத் துயரின்றிக் காப்பீரே! 8
--- 0 ---
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
24-7-2009
------------------

தனிக் கவிதைகள் -- 9

என் பேறு
(விவேகானந்தா கல்லூரி தமிழாசிரியர் திரு ப. இராமன் அவர்களிடமிருந்து ஒரு கடிதம் பெற்ற மகிழ்ச்சியால் எழுந்த கவிதை : 27-8-1963)

ஆறா நெடுமனத் தாசையால் வாடினேன் வாழவே,
கூறாக் களிப்பென்னைக் கோடியாய்க் கூடவே, நாளுமே,
மாறா தகாதலும் மாண்புற நாடின முடங்க லென்
பேறா குமாலென் பெருவாழ்வு பழுத்தது போலுமே!
-- 0 --
ஆசிரியருக்கு
{இந்நான்கு விருத்தங்களும் , அடியேனின் கல்லூரி தமிழ் ஆசிரியர், திரு ப. இராமன் அவர்களுடைய இனிய கடிதத்திற்குப் பதிலாக எழுதி அனுப்பப் பட்டவை. இதில் குறிப்பிடப்படும் அவர் இயற்றிய வெண்பா இந்த கவிதைகளின் முடிவில் தரப் படுகிறது --- 6-9-1963}

அன்புடைய ஆசானின் ஆசி தன்னை
அரியதொரு செல்வமெனப் போற்று கின்றேன்;
இன்புடைய சொற்களுடை முடங்கல் தானும்
என்பேறே எனவெண்ணிப் பெருமை கொண்டேன்;
என்புடனும் தசையுடனும் நரம்பும் பலவும்
இயைந்தபிணி உடலுக்குள் உள்ளம் வைத்துப்
பண்புடைய கருத்துடனே அன்பும் சேர்த்துப்
படைத்திட்ட தெல்லாமே இதற்குத் தானோ?
மணிமுத்துப் பொய்கையென தங்கள் கடித
நல்முத்துச் சொற்கடலுள் குளித்து நலமே
அணிவித்துக் கொண்டெனது அறிவைப் பெருக்கி
ஆனந்தம் தானடைந்து நின்ற காலை
தனிமுத்தாய் ஆனதொரு வெண்பா என்றன்
தலையைத்தான் நிமிர்த்துமதன் அழகி னாலே
பனிமுத்துத் தாமரையில் தங்கும் திருவே
‘பத்ம’த்தில் தங்காத முரணை விட்டீர்!

என்கவிதை நற்கவிதை அல்ல வெனினும்
என்றன்தமிழ் ஆசிரியர் அருளைப் பெற்றால்
பொன்கவிதை ஆகிடுமே! போதும், போதும்!
பார்முழுக்கப் புகழொன்றும் வேண்டாம், வேண்டாம்!
உன் கவிதை முளைவிட்டுத் தழைத்தே ஓங்கி
உயர்ந்ததுவாம் தருவானால் விய்ப்பும் உண்டோ!
இன்கவிதைக் காவியமும் இயற்றும் பேறாம்
இன்பத்தை அடைவேன் நும் அருளினாலே!

ஆசிரியர் அன்புக்குப் பாத்திர மாகும்
ஆசையன்றி வேறில்லை எனக்குத் தானே;
நாசிறிய தென்றனக்கே என்ப தாலே
நன்கமையா என்சொற்கள்; நல்கா வின்பம்;
‘நீ சிறியன்’ எனக்கூறி, என்றன் பிழையை
நீக்கிவிட்டு நலமெடுத்து (இருக்கு மாயின்),
பேசரியப் பெருமையுடை ஆசி ரியரே,
பெருமருளைப் பொழிவீரே! பணிகின் றேனே!
--- 0 --
{திரு ப. இராமன் அவர்கள் அடியேனுக்கு அனுப்பிய வெண்பா:-
செந்தா மரைமலரும் சீர்கவிப் பத்மமும்
அந்த மலர்ச்சியால் ஒப்பரால் -- அந்தத்
தண்டா மரைகூம்பும் பத்மத்திற் கஃதில்லை
பண்டே அறிகுவேன் நன்று.}
-- 0 --

அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
23-7-09
--------------

Wednesday, July 22, 2009

தனிக் கவிதைகள் -- 8

குறிஞ்சி மகள்
இருமலைச் சாரற்றேன் ஈட்டுங் குறிஞ்சி
யருமலர் சூடும் அகில்சூழ் அரிமண
லோதி யரவமென யாயுள்ளப் பேதறவு
மல்கிடச் செல்லும் மடவரல் வல்லி
கடிகாதல் முந்த கருயாமத் ‘தென்னையும்
நெடிதுகாத் தாரோ நிலத்தே’ எனவுயிர்த்து
நீள்வழிப் போவள் கடிது.
{ஏழடிப் ப#றொடை வெண்பா)
குறிஞ்சி
களவு
(ஓதி – கூந்தல்; பேதறவு – மயக்கம்; அகில் – அகில் மணம்.
தலைவனை நாடிச் செல்லும் தலைவியினைப் பற்றி இயற்றியது.
குறிஞ்சித் திணைக்கு உரிய முதல், கரு, உரிப் பொருள்கள் அமைந்திருத்தலைக் காண்க.)
-- 0 --
கவி ஊற்று -- 1
உன்னைக் கண்ட போதினிலே -- மன
ஊற்றில் கவிதை சுரக்குதம்மா!
கன்னல் மொழியைக் கேட்கையிலே
கனிந்த பாடல் பிறக்குதம்மா!

நித்தம் நின்னை நினைக்கையிலே -- மன
நிறைவால் காவியம் தோன்றுதம்மா!
கத்துங் குயிலின் ஓசையிலே -- உன்றன்
காதல் இசையே கேட்குதம்மா!

முந்தைப் பிறவி நினைவெல்லாம் -- உளம்
முன்னே நின்று வாழுதம்மா!
எந்தன் உள்ளக் கோயிலிலே -- உன்
எழிலே திருவாய் ஆளுதம்மா!

நேற்றோ இன்றோ நெடுநாளாய் -- மிக
நீடு நிலைத்த கற்பனைகள்
ஆற்றின் நீராய்க் காதலெனும் -- பெரும்
ஆழி தன்னைச் சேருதம்மா!

வானம் போன்று பரந்ததம்மா! -- இவ்
வையம் போல நிறந்ததம்மா!
மோனக் கடலின் ஆழம்போல் -- மன
மோகம் பெரிதாய் மூண்டதம்மா!

எண்ணப் பொழிலின் நடுவிருந்து -- நீ
ஏந்தும் யாழின் ஒலியெழுப்ப
வண்ணக் கற்பனை உருவெடுத்த -- இன்ப
மாரி பொழிந்து சிறக்குதம்மா!
-- 0 --
கவி ஊற்று -- 2
வாடிக்கிடந்த என்னுள்ளம் வறட்சியுற்று, கற்பனையைத்
தேடிக்கிடந்த என்னெஞ்சம் சோர்வடைந்து போகையிலே,
நாடியிழந்த உடலுக்கு நல்லுயிரே வந்ததுபோல்
மூடிக்கிடந்த இதயத்தை முன்வந்தே திறந்திட்டாய்!

பாரதனில் என்வாழ்வு பாலைவன வீணிலமாய்ச்
சீரெதுவும் இல்லாமல் தீர்ந்திடுமோ எனவஞ்ச,
வேறெதுவும் இன்மையினேன் வீறுற்றே எழுந்திடவே
சீரதுவே வருவதுபோல் சீராள்நீ வந்தனையோ!
-- 0 --
இசைப்பாய் என்று வந்தேன்!

இசைப்பாய் என்று வந்தேன் -- உன்
இசையில் மயங்கி நிற்க -- நீ (இசைப்பாய்)

மலராத மொட்டு மலர
மணக்காத மலரும் மணக்க
வளராத முல்லை வளர
வழங்காத இன்பம் தரவே -- நீ (இசைப்பாய்)

தணியாத தாகம் கொண்ட
சரகான தளிரும் தழைக்க
இனிக்கின்ற காதல் தன்னால்
இறக்காது நானும் பிழைக்க -- நீ (இசைப்பாய்)
-- 0 --

யாருக்குக் காத்திருப்பாய்?

யாருக்குக் காத்திருப்பாய் -- நீ

ஊருக்குள் இருளகற்ற
உலவிவரும் நிலவுக்கா?
தாருக்குள் வண்டொலிக்கும்
தளிர்நடையாள் முகத்துக்கா? (யாருக்கு)

நீருக்குள் நெளிந்தோடும்
நீள்கயலின் பார்வைக்கா?
பாருக்கே பெருமையெனப்
பரிவுடைய கண்ணுக்கா? (யாருக்கு)

வீரத்தின் உருவெடுத்து
வளைந்தநெடு வில்லுக்கா?
நேருக்கு நேரான
நீள்புருவம் இரண்டிற்கா? (யாருக்கு)
-- 0 --
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
22-7-2009
---------------------

Tuesday, July 21, 2009

தனிக் கவிதைகள் -- 7

கவி நெஞ்சம்

(1960-ம் ஆண்டு, சென்னை கல்லூரிகள் தமிழ் மாணவர் மன்றத்தில்
நடைபெற்ற கவி அரங்கத்தில் பங்கு பெற்ற கவிதை.)

காப்பு

வெள்ளத்தின் வடிவனைய விரிநெஞ்சைக் கொடுத்திட்டு,
உள்ளத்தின் வடிவணைக்க உயர்ந்ததுவாம் கவியமைத்து,
கள்ளத்தின் வடிவழிய கருணையினை அளித்திட்ட
அள்ளத்தேன் அன்பருளும் ஐயனையே சரணம்யான்!

கவி நெஞ்சம்

தேனனைய சுவைபடைத்த தெளிவான பலநூல்கள்
கோனனைய தகுதிபெறும் புலவோர்கள் படைத்தனரே!
ஊனனைய உயிரனைய உலகோரை மகிழ்விக்கும்
வானனைய கவிதைதனை நெஞ்சனவே தொடங்குகிறேன்!


அன்புருவாய் ஆனவளாய், ஆசைமிகப் படைத்தவளாய்
இன்புருவாய் கவிபடைத்து இனிமையெலாம் அதிலடக்கித்
துன்புறுமாம் உளங்களிக்கத் துணைவியெனப் பெயரெடுத்துப்
பண்புறுவாய்; கலையிடத்துப் பக்திகொண்ட எழிலாள்நீ!

நெஞ்செனவே நானுன்னை நேசமுடன் அழைத்திடுவேன்;
பஞ்செனவே பூவெனவே பண்பாடும் குயிலெனவே;
மிஞ்சுகலைக் கவியிடத்து மீளாத காதலினால்
துஞ்சுமெழில் கூடிடவே தூயகவி படைப்பாய்நீ!

துள்ளிவரும் ஓடையென, துளைத்துவரும் வேலெனவே,
மெள்ளவரும் வேழமென மேவிவரும் பல்கவிதை
அள்ளிவரும் ஆறேநீ! அணையாது என்னிதயம்
கொள்ளவரும் கீர்த்தியெலாம் கொழுந்துவிடும் தீபம்நீ!

பண்ணென்னும் பாவாய்நீ, பதமான விளைவுடனே,
மண்ணென்னும் மாண்புடைய மதிபுலவர் மனம்முளைத்து,
கண்ணென்னும் கருத்தாகக் கதிரொளிபோல் தினம்தழைத்து,
எண்ணென்னும் மதிப்பின்றி இனியநடை கற்றாய்காண்!

ஆயிரமா யிரமெண்ண அலைகளுமாய்; திரள்கருத்து
ஆயிரமாம் முத்துக்கள்; அரும்பவள அணிநலன்கள்;
ஆயிரமாம் கற்பனைகள், அழகொளிரும் சங்கங்கள்;
ஆயிரமாய் உரைத்தாலும் அடங்காத கடலணையாய்!

கம்பன் தனை ஆண்டாய்நீ! கவிநெஞ்சக் காரிகையே!
இம்பரும்பர் போற்றும்பேர் இலக்கியத்தைப் படைத்திட்டாய்,
நம்புகாதை சிலம்புதனை நயம்புகலும் குறளதனை
அம்புவியில் அழகாக அளித்திட்ட நங்கையும்நீ!

காவியமாம் காதலியே! கடுவேகம் உன்னிடத்துப்
பாவிசைப்பப் பண்டொருநாள் பல்லவனார் பொன்னுடல்தான்
ஓவியமே கரிந்ததுபோல் உலகுபுகழ்க் கவிதையினால்
சேவிப்பச் செய்தவொரு தீங்கவிஞன் தனைக்காணாய்!

வாழ்த்துவதில் வீழ்த்துவதில்; வகையாகத் துன்பத்தில்
ஆழ்த்துவதில் அகற்றுவதில்; அழகான இன்பத்தில்
சூழ்த்துவதில் சேர்த்துவதில்; சொல்லடுக்கப் பல்பொருளைத்
தாழ்த்துவதில், தருகுவதில்; தனிப்பெரும்பேர் பெற்றாய்நீ!

வசைபாட வகைசெய்தாய், மதிக்காத புல்லரிடம்;
இசைபாட இனிதானாய் இரக்கங்கொள் செல்வரிடம்;
நசைபாட நனியானாய், நற்கவிதைப் புலவரிடம்;
திசைபாட தினமும் தான் செருக்காகச் செல்வாய்காண்!

கோலமிடும் வண்ணத்துக் கூடுமிசை ஒலியதனை
ஓலமிடும் பெருங்கடல்தான் ஓங்கார ஓசைதனைக்
காலமிடும் ஆடலினைக் காணாத புதுமைதனைச்
சீலமிகப் படத்திட்ட சீர்கவிதை எத்தனையோ!

பொழியாத கருத்தில்லை; பொலியாத நொடியில்லை;
வழியாத மனிதரில்லை, வார்க்கின்ற இன்பத்தால்;
அழியாத பொருளாடும் அளவற்ற கவிதைய்லே;
எழிலாகும் எழிலெல்லாம் எடுத்தாளும் உன்பாட்டால்!

மந்திரத்துப் பிறந்ததுவோ; மணியான இக்கவிதை
சுந்தரத்துத் தோய்ந்ததுவோ; சுவைகாணும் உள்ளத்தின்
தந்திரத்தின் வடிவிதுவோ, சொல்முத்துக் கோவையெல்லாம்;
உந்திரத்துப் பெருமையெலாம் ஓயாது பாடுகின்றார்!

நூறெனவே ஆண்டுகளும் நூதனமாய் நடந்தாலும்,
கூறுமெழில் குறையாத குழலாளென் வளர்நெஞ்சே!
நூறில்லை, ஆயிரமாம் நூல்களிதைக் கூறிவிடும்
ஊறில்லை, உன்னிடத்து உள்ளதெலாம் கவிவளமே!

நீதானே என்நெஞ்சம்! நீயேதான் என்னிதயம்!
போதாமே உன்னழகு; பொலிந்திடுமுன் சொல்மணிகள்;
கோதாய்!என் ஒண்விளக்கே! கொவ்வைச்செவ் வாய்திறந்து,
போதாய்,நீ இன்கவியைப் படைத்தாய்!நீ வாழ்கவென்றும்!
-- 0 --
அவையடக்கம்
(1963-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், அடியேனுடைய “கவி நெஞ்சம்” என்னும் கவிதை படிக்கப்பட்டது. அப்போது, தொடக்கத்தில், இந்த “அவையடக்கம்” என்னும் கவிதையைப் படித்தேன்.)
சொல்லாலே கவியமைத்து விந்தை செய்து
தோன்றுகின்ற கற்பனைக்கே உருவம் தந்து
கல்லாலே ஆனதுபோல் உறுதி கொள்ள
கட்டிவைத்தார் காவியத்தைக் கவிஞ ரெல்லாம்.
புல்லான சிறுவன்நான் அறிவு கெட்டுப்
புகழ்மிக்கப் புலவோர்கள் இடையில் நின்று
செல்லாத கவிதைதனை உதிர்க்க வந்தேன்
செவிமடுத்துச் சிறிதென்னை மன்னிப் பீரே!

அழகழகு சொற்களையே ஆளு கின்ற
அரியதமிழ்ப் பெரியோர்கள் முன்னி லையில்,
பழகுமொழி இன் தமிழில் வல்லு நர்கள்
பக்கத்தில் அமர்ந்திருக்க அமைதி யோடு
அழகுதமிழ்ப் பாடலினைக் கேட்க எண்ணும்
ஆசைக்கு மோசந்தான் என்று வந்த
வழிதிரும்பி வீடுசெல்ல எழுந்தி டாதீர்
வணங்குகிறேன் கேட்பீரென் கவியைத் தானே!

மூளுகின்ற கற்பனையைத் தன்னுள் தாங்கி
மொட்டன்ன சொல்லெடுத்துக் கவிதை மாலை
நீளுகின்ற தாய் அழகாய் ஆக்கி விட்ட
நெஞ்சமென்பாள் மென்மையினாள் ஆற்றி வந்த
நாளெண்ணி அவளுக்கோர் பாட்டி சைக்க
நானெண்ணிப் புனைந்திட்ட கவிதை தன்னைக்
கேளுங்கள், பிழைபொறுத்து; நன்மை தங்கக்
கூட்டுங்கள் பெருமைதனை எனக்குத் தானே!
-- 0 --
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
21-7-09
---------------

Sunday, July 19, 2009

தனிக் கவிதைகள் -- 6

மலராயா சிறிதெனக்கே

வானத்தில் நிலவுவர
வாடியதேன் உன்முகமே?
தேனமுதம் தாராது
சோர்ந்ததுமேன் தாமரையே?

வண்டுநானே வந்துள்ளேன்
வதங்கியேநீ இருப்பதுமேன்?
கண்டெதனை அஞ்சியே நீ
கலங்குகின்றாய் செங்கமலம்?

அல்லியுன்னைத் திட்டினளா?
அவமானம் செய்தனளா?
முல்லைப்பூ அதட்டினளா?
முகம்மூடி அழுவதுமேன்?

அன்பருளும் இலக்குமியும்
அகன்றனளா உனைவிட்டு?
துன்பத்தில் இருக்குமுனைத்
தேற்றிடவே வந்துள்ளேன்!

திறப்பாயா உன்னிதழை?
சிரிப்பாயா எழில்மலரே?
மறப்பேனோ உனையேநான்?
மலராயா சிறிதென்னக்கே?

--0—

எங்கள் குழு
(சென்னை விவேகானந்தா கல்லூரியில் பட்டப் படித்து வந்த போது
அடியேனுடன் மூன்று தோழர்கள் ஒரே குழுவாக இருப்போம். அடியேனுடைய பெயருடன் கூடியவர், ஸ்ரீனிவாஸன், எழும்பூரிலிருந்து வருவார்; இராமசுப்பிரமணியன் இருந்த்து பெரம்பூர்; அடியேனும் கலியாணசுந்தரமும் மயிலையில் இருந்தோம்; கல்லூரியில் எப்போதும் சேர்ந்தே இருப்போம். எங்கள் குழுவைப் பற்றி அடியேன் அப்போது எழுதிய கவிதை இது.)

மயிலைமா வூரன் கலியா ணசுந்தர்
நயங்கனிந் தீர்க்க நலம்பொங்கும்; நாளும்
துயிலெழு முன்னே ரெயிலேறிச் செல்லும்
இராமசுப்பு நட்பிற் கிணையார் உரைப்பர்?
செழுமையாம் நுண்ணறிவும் தேற்றமும் சேரும்
திருநிவா சன் தானும் சீனியானும் சேரின்
இருக்குமோ மண்ணிலே காலம்?
-- 0 --
கல்யாண சுந்தரம்
(நண்பன் திரு கல்யாணசுந்தரம் தனது இருபதாம் வயதில், 23-3-1962 அன்று
அகால மரணம் அடைந்ததைக் கேள்வியுற்று, ஆறாத் துயர் கொண்டு, நாத்தழுக்க, உளம் ஒடிய நின்றோம். கலை வடிவை ரசித்து எம்மை இன்பத்தில் ஆழ்த்தி வந்த உயிரனைய நண்பன் இறந்ததனால் ஏற்பட்ட உணர்ச்சியிலே எழுந்த கவிதை இது. அவனுடைய ஆன்மா சாந்தி பெறுவதாக!)

நெஞ்சோடு நெஞ்சுரசி நேரின்பம் கண்டபெரும்
நாளெண்ணி நைந்துருக நீசென்றாய் எமைவிட்டு;
நஞ்சாகும் துயர்க்கடலில் நலிந்துழல எம்முறவின்
நிலையறுத்துத் தொடராத நிலைநாடிச் சென்றாயோ?

கண்ணுக்கு ஒளியீந்து கணமொன்றில் பறிக்கின்ற
காட்சியினை யாம்கண்டு கலங்கிடவே நிற்கின்றோம்;
பண்ணுக்குச் சொல்லமையா; பார்வைக்குத் திரையிட்டப்
பெற்றவராய் நிற்கின்றோம், ஒளியிழந்த அகல்கண்டு!
-- 0 --
மழையே வாராய்!

மணமெழுப்பி முகில்சொரிய வருவாய்நீ மழையே!
குணதிசையில் கடலுன்னைக் கூப்பிடுதே அறியாய்!
மணிமணியாய் முற்றத்தில் வளர்க்கின்ற தண்மை
தணியாத பேரின்பம் தருவாயோ இன்றே!
இணையில்லை எமக்கென்றே இறுமாப்பு தங்க
மணஞ்செய்யும் வீட்டினிலே வழுவாது விரைந்து
கணப்பொழுதில் குளமாக்கிக் களிப்பெய்திச் செல்வாய்!
அணங்கென்றே அன்புடனே அழைக்கின்றேன் வாராய்!
-- 0 --
(கல்லூரியில் மனோன்மணீயம் என்னும் காவியம் ஒரு பாடமாக வைத்திருந்தார்கள். அந்த நாடகத்தில் வந்த இரு பாத்திரங்கள் பற்றியவை இந்த கவிதைகள்:)
ஜீவகன்

ஆண்மையும் நெஞ்சினில் ஆர்த்திடும் வீரமும்
மாண்டதன் நாட்டினிற் பற்றுமே -- பாண்டியன்
சீவகனாய் பேர்புகழும் சேர்ந்ததொரு பண்பொளியாய்
ஓவியமாய்க் கூடும் அழகு.

குடிலன்

குடிபோற்றும் மன்னன் குலமொழிக்க நெஞ்சில்
விடந்தங்கத் தீவினைகள் ஆற்றி -- குடிலனார்
வாழும் உலகத்துள் வாய்மைக்கு மில்லையோ
வாழும் உறுதியே தான்!
-- 0 --
அன்னமே! அன்னமே!
(டென்னிசன் என்னும் ஆங்கிலக் கவிஞரின் ‘ஸ்வாலோ ஸ்வாலோ’
என்னும் கவிதை கல்லூரியில் ஆங்கில பாடத்தில் இடம் பெற்றிருந்தது. அக்கவிதையைத் தழுவி எழுதப் பட்டது இது.)

அன்னமே! அன்னமே! அழகிய அன்னமே!
தென்னகம் புகுந்திடின் செல்லுவாய் அவளிடம்
பொன் தனைப் பூசியப் பொற்சுவர் இருந்தே
உன்னிடம் சொல்வதை உரைத்திடு வாயே!
எம்மைநீ அறிவாய் எழில்மிகு அன்னமே!
உண்மையில் அழகும் உறுதியிலா உள்ளமும்
தன்மையாய்ப் பொருந்தும் தென்னவர் கட்கே!
மென்மிகு நெஞ்சமும் மேன்மை உறுதியும்
கொண்டவர் நாங்கள்; கொண்டிலை அழகை!
கொண்டிடின் உன்னைக் கூடவே தொடர்ந்திட
அவளகக் கூரையில் அமர்ந்தே நானும்
நவரசம் தவழ நயமாய்க் குழலில்
புள்போல் இசைப்பேன் காதல் கீதம்;
உள்ளே அழைத்தே உனைப்போல் என்னை
மார்பில் அணைத்தே இதயத் தொட்டிலில்
போர்த்தி அசைப்பள், மரணம் என்னைத்
தழுவும் வரையில்! சொல்வாய் அவளிடம்:
வாழ்வோ அருகும் அன்போ விரியும்;
அனன்மே, அனன்மே! அங்குநீ சென்றே
இன்னமு(து) இசைதனை இறைத்தே அவளை
என்னுடை யதாக்காய், எனதுள மலராய்!
தென்னகம் சென்றுநீ செப்புவாய் அவளிடம்
உன்னையே தொடர்கிறேன் என்றே!
அனனமே, அன்னமே! அழகிய அன்னமே!
-- 0 --
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
19-7-09
---------------

Thursday, July 16, 2009

தனிக் கவிதைகள் -- 5

கவியணங்கு
உள்ளப் பாற்கடலில் உணர்வெனும் மேருவினால்
வெள்ளப் பெருக்கெடுத்து வெண்ணெய்க் கருத்தெழுமே!
அள்ளிப் பருகிடவே ஆடியே வந்திடுவள்
கொள்ளை அழகுடனே கொவ்வைக் கவிக்குமரி!

சீரடித் தளையுடனே செல்வமாம் சொல்லுடனே
ஊரரும் பாவெனவே உண்டிட இனிமையெலாம்
நாரியர் இதழ்களிலே நடந்திட மென்மையெலாம்
சார்தர உலவிவரச் சார்தரும் புகழெலாமே!

வஞ்சியும் அகவலுமாய் வண்ணமார் வெண்பாவும்
நெஞ்சினைத் தழுவிகின்ற நேரொலி கலிப்பாவும்
அஞ்சன நயனத்தாள் அணிந்திடும் பொன்னகையாம்!
எஞ்சுமோ சிலவெழிலும் ஏந்திழை பூண்டிட்டால்?
--0—0—

இன்ப நிலை
வானவெளியே முகில்கூடி
வார்க்குதின்ப மாரி;
போனகுயிலும் மீண்டுகூடிப்
பொழியுதின்ப கானம்;
ஞானவொளியும் உளத்தொளிர
நாடுதின்ப மோனம்;
ஊனைமறந் துள்ளங்கவி
உயிர்படைக்கும் பாரில்!
--0—
உதயம் (வசன கவிதை)
ஆதவன் காலையில் தோன்ற
ஆகிடுமோ உதயமென?
குங்குமச் சேற்றைக் கீழ்வான்
சிவக்கத் தடவினாற் போல்
தங்கப் பரிதியும் எழும்ப
தணியுமோ துன்பவிருள்?
நீ கூறாய்,
நன்னெஞ்சே!
நெடுவானம் வெளுத்ததனால்
நீயும் வெளுத்தனையோ?
நின்றன் பெருமச்சம்
நீங்கியதோ? இருள்போயிற்றோ?
இல்லையில்லை, சிறிதுமில்லை!
பின் என்றாம்?
என்று நீ கவியியற்றி
கனிந்த சுவைதனை
தணிந்து அளிக்கின்றனையோ,
அன்று,
அன்றே, நீயுறுவாய்
இன்பம், உதயம் ஞானம்
எல்லாம்! உன் கீழ்வான்
சிவக்க இருள் ஓடும்;
குயிலின் கீதத் தென்றல்
பரவும்; நீ சிறப்பாய்!
--0--
கற்பனை
கற்பனை என்னும் மாது
காவிலே உலவு கின்றாள்!
வெற்றிச் சுடரே அவளால்
வேட்கை பொங்கும் நெஞ்சில்!

மெல்லிய திரையை விலக்கி,
மோகன முகத்தைக் காட்டி,
நல்லதோர் கீதம் இசைத்து
நெஞ்சம் தன்னை அழைப்பாள்!

நகையாம் முத்தை உதிர்த்து
நெளிந்தே இடையை வளைத்து
குகையாம் நெஞ்சின் இருளை
குலைத்து ஓடச் செய்வாள்!
--0—

இளமை நாட்கள்

இளமை நாட்கள்! இனிய நினைவலை
விளக்கும் நாட்கள் வந்தெனை மீண்டும்
மகிழச் செய்திட முயலுமோ? முடியுமோ?
துகிலும் கொடியெனக் காற்றில் பறக்க
தூவும் அவள்தன் தூயதாம் எழிலை
அவளே அவளே அன்றென் நெஞ்செனும்
மொட்டும் மலர்ந்திட மகிழ்ச்சியை ஊட்டுவள்!
--0—
சாகுந்தலம்
(ரவீந்திர நாத் டாகுர் எழுதிய ஆங்கிலக் கவிதையின் தமிழ்வடிவம்)
இளமையின் மலர்ச்சி யோடு
முதுமையின் கனிவும் ஏந்தி,
உளந்தனை மயக்கி இன்ப
உணர்விலே ஆழ்த்தி உண்ண
அளித்திடும் யாவும், என்றும்
அழிவிலா விண்ணும் மற்றிந்
நிலையிலா மண்ணும் சேரும்
நாமமே சாகுந் தலமாம்!
--0--

கவிஞன்
எண்ணம்:
ஆற்றல் பெற்றார் -- மன
ஊற்றி லோர்கவி – வந்து
ஆற்றும் என்னைத் தேற்றும்.

உள்ளம்:
தாரித் திருப்பேன் -- உளக்
கோரிக் கையோ -- எனை
ஊறித் திளைத்தே ஆர்க்கும்!

நினைவு:
பாவிலே ஒலிக்கும் -- இனிய
காவிலே அலரும் -- எழிற்
பூவிலே கையோ தாவும்!

கனவு:
நாணித் தவித்து -- இதழ்
கோணி விரிக்கும் -- அதில்
காணும் மலர்முகம் நாணும்!
வாரித் தூவும் -- இன்ப
மாரி வானில் -- அந்த
நாரி என்னைச் சாரும்!
மானின் விழிகள் -- முத்
தீனும் இதழ்கள் -- அணுகின்
நாணும் இடையும் தானே!

உண்மை: (குலைவு):
கண்ணைத் திறந்து -- ஒளி
விண்ணை நோக்க -- இது
மண்ணே என்றுளம் எண்ணும்!
--0—

புத்தாண்டு

புத்தாண்டு வருகுதிந்தப்
பூவுலகிலே
எத்தனைநல் சேதிகளை
எடுத்து வருகுதோ?
நித்தியமும் வருந்துன்பம்
நீங்கித் தொலையுமோ?
செத்த இன்ப வாழ்வுமீண்டும்
சோதி பெறுமோ?

நெஞ்சத்தில் கற்பனையும்
நீண்ட கவிதையில்
மஞ்சுமிகப் பொங்கிடவே
மலர்ந்து மணக்குமோ
அஞ்சியஞ்சி வாழுகின்ற
அழகுக் கவிதைகள்
நெஞ்சினிலே தோன்றியின்ப
நிலையை நாட்டுமோ?
--0—
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
16-7-09
---------------

Wednesday, July 15, 2009

காதல் கவிதைகள் -- 4

காதல் உள்ளம் (1)
தண்ணொளிர்ப் பொன்கதிர் தாழ்த்திக் கதிரவன்
மண்ணிலே தாமரை மென்னிதழை -- எண்ணா
எழிலாக்கும்; அம்மலர்போல் என்னுளம் ஈர்த்தாள்
மழலைச்சொல் பேசும் அவள்.

அம்பலக் கூத்தனின் அன்புதன் எல்லைபோல்
உம்பரும் கண்டதில் ஆழ்ந்திட -- அம்புபோல்
மென்நுனி கூர்மையாய் நீண்டவள் கண்ணென்றன்
மென்னுளம் புக்கது காண்.

ஆனந்தச் சித்தனின் ஒப்பில் மிடற்றிலே
நானந்த நாகத்தை நண்ணுவேன் -- மானந்தப்
பெண்ணெனும் அன்னமாய் ஆடியசைந் தோடிடும்
மென்னிடைக் காரிகை கண்டு.

கங்குலோ ஒண்பகலோ, கண்களின் மாறுதலோ
திங்களும் வந்திடக் காரணம்? -- அங்கவள்
இன்முகத் தண்மைகண் டின்றையோ பூர்ணிமை
என்னவோ? எண்ணுவேன் யான்

சொல்லெனும் இன்சுவை செப்பிடும் வாயாலே
வல்லவள் உள்ளத்தை ஈர்ப்பதில் -- கல்லுமே
அன்னவள் காட்சியால் நீர்த்துக் கலந்திடும்
பெண்ணவள் சொல்லிலே காண்.
-- 0 --


காதல் உள்ளம் (2)
வானிடிந்து முகிலொடிக்க வேணியுடைக் கூத்தன்
மாவடிகள் நிலம்பிளக்க தாவிநடம் செய்தோன்
மேனியெனக் கருத்தெழவே நானவரைக் கண்டு
மெள்ளமெள்ள என்றனது உள்ளமதைக் கொண்டு
மானினைப்போல் துள்ளியோடி யானவரைப் பிடிக்க
மாறிடாது காதலுடன் ஆறிடாது துடித்து
ஞானியிந்த உலகத்தின் மோனியவள் தனைப்போல்
ஞாலத்தில் அவரெனவே காதல்மிகக் கொண்டேன்.

திண்தோளும் வன்கையும் விண்ணதினிற் கொழிக்கும்
சிதம்பரன்போல் நிறைந்தவரும் விதம்விதமாய் செழித்தும்
எண்திசையும் மூவுலகும் ஒண்கதிரைப் பரப்பும்
எழில்வட்டக் கதிரவனின் அழியாவொளி திறத்தில்
எண்ணிடாதோர் பெரும்பகுதி கண்ணதிலே கொண்டும்
எங்குமவர் உள்ளத்தில் பொங்குமன்பும் உண்டு;
மண்ணிலேயார் சொல்வல்லார் என்னிலவ ரேதான்
மங்கையெனது உளம்புகுந்து சொந்தமெனக் கொண்டார்.
-- 0 --

கொட்டும் மழையில் …….
கொட்டும் மழையில் கோலம் புரிந்து
பட்டுப் பாதம் பயின்ற நடையின்
விட்ட பொருளெனை வாட்டுங் கொடுமையைக்
கட்டு உரைக்கவே கவிதை இழந்தனே!

முத்த நீருன் முகத்தை அணிசெயப்
புத்தம் புதியதாய் பூத்த பொலிவினில்
பத்துப் பத்தாய்ப் பல்கிய உணர்வெலாம்
குத்தத் துடிக்குமென் குளிர்ந்த நெஞ்சமே!

காணும் கண்களும் களிப்பைச் சமைக்கவும்
பாணும் இசைக்குமுன் பங்கய இதழ்களும்
வானும் வெட்கிட வளைந்த புருவமும்
நாணும் கொடியுமே நல்கும் துன்பமே!
-- 0 --
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
15-7-09
--------------

Tuesday, July 14, 2009

காதல் கவிதைகள் (3)

காதல்

நிலந்தழுவி மகிழ்வுபெறும் நெடுங்கடலாம் மடந்தையவள்
நிலவுதரும் ஒளியிலவிழ் நறுங்குமுத மலருமிந்த
உலகினிலேன் நிலவவேண்டும்? உனைப்படைத்து எனைப்படைத்த
அலகிலாபேர் உருவுடையோன் அவைபடைத்தான் அறிந்திடுவாய்!

கருமுகில்கள் அமுதமுத்தம் களித்தளித்து அணைத்திடுமிப்
பெருமலைகள்; நினைவலைகள் பெரியவின்பம் அனைத்துமுறும்
திருவுளத்தால்; கவிபலவும் திரளெழிலைத் தழுவிநிற்கும்;
உரு உவமை அவைதனுக்கே உனைத்தழுவ எனைப்படைத்தான்!

நினைவுகொளா எழிலுருவம்; நினைவழிய துடியிடையும்;
எனையழைக்குங் கயல்விழியும்; எதையுமீர்க்கும் மலரிதழும்;
வினையழிந்து கருகிடவே விரவுமன்பு தருமுளம்நீ;
எனைக்கவிகள் இசைத்துவர இனியவுனைப் படைத்தனனே!

நிழலொளியாய்; பதப்பொருள ய்; நிறைவிசையும் புகழ்க்கவியாய்;
கழலொலியாய்; சிவமகளாய்; கமலமென உனையணுகிக்
குழல்புரளும் மெலிவிடையை குலவுகவி தனிலமைக்கப்
பழம்பெரியோன் எனைப்படைத்தப் பொருள்விளங்க எதிர்வருவாய்!

பருதிதனைத் தொடர்ந்துவொளி பரப்பிவானில் மதியவனும்
வருவதெல்லாம் உனதுளத்தை வரிந்தடைய; எனையருகில்
இருக்கநோக்கி மறைந்துவோடும், இருள்படர, நினைவழிந்து
கருவெனது பெருநினைவின் கவினுருவாய் அமைந்தநீயே!

அவனியும்பல் உலகமுந்தாம் அருக்கனையே சுழன்றுசுற்ற
தவமுனிகள் ஒருவனையே தழைந்துசுற்ற இயற்கையென
துவள்குழலுன் எழில்வடிவைச் சுழன்றுவரும் எனதிதயம்
கவியுருவாய் நினைவுலகும் கலைப்படைப்பும் எனதுளமும்!

அழிவிலது நமதுகாதல்; அதுவனைய படைப்பென்னும்
எழிலுனதும் அழிவிலதே; எனவியற்கை அமைந்ததுகாண்!
குழலுனது எனைப்பிணைக்கக் குழையவினப் புணர்வினிலே
கழியினிக்கும் கவியமுதம் கனந்தெழுமே இனிதெனவே!

எனதெனநான் படைக்குமிந்த எழிற்கவிதை உண்மையிலே
உனதழகின் மதுவளிப்பாம்; உலகிதனை அறியுமோதான்?
வனத்திடையே மலர்ந்தநறு மலர்க்குமுதம் நினதெழிலாம்!
மனத்திடையே சுடர்விடும்நீ அமுதினுயர் கவிப்பொருளே!

--0—0--

தாபம்
கங்குலைக் காண அஞ்சிக்
கண்தனை மூடித் தொல்லை
பொங்கிட நிற்பேன் நானே
பொய்கைப் புனலின் நடுவே!

நடுக்கிடும் குளிரை வைத்து
நங்கையென் மேலே கதிர்கள்
விடுத்திடும் மதியை நொந்து
விதியென மயங்கு வேனே!

காதலன் ஊடல் இ#தோ?
காட்டிய முகத்தை மறைத்து
வேதனை பெருக்கும் இருளை
வளர்த்ததும் அவன்விளை யாட்டோ?

--0—0--
வண்ணம் குலைந்து ……

வண்ணம் குலைந்து
எண்ண இயலா(து)
இறைந்து பரவியதே --- உன்
நிறைந்த எழில்முகமே! -- என்
எண்ண அலைகளை
எழுப்பும் மதிமுகமே!
கன்னல் மொழிதனை
இன்னுற அளித்திடும்
சுந்தரச் சிறுவிதழ்கள் -- பெரும்
மந்திரச் செம்மைகொளும் -- அவை
என்னைக் கற்பனைக்
கிண்ணத் தாழ்த்திவிடும்!
--0—0—

அவள்
ஓடிவந்தாள் என்னிடமே
ஓங்குகடல் திரைபோல;
ஆடிவந்தாள் அழகரசி
ஆசையுளம் ஆடுவதால்;
பாடிவந்தாள் பவளவிதழ்
பட்டுச்சொல் அணைத்திடவே;
நாடிவந்தாள் என் துன்பம்
நலிந்துநிலை குலைந்திடவே!

சூழும் இயற்கைக் கவினதிலே
சூடும்பேர் இனிமையெலாம்;
வாழும் இயற்கை வாழ்வதிலே
வளியென்று தனைக்காட்டி;
ஊழும் இயற்கை நெறிமுறிய
உயிரளிக்கும் பரமனென;
தாழும் கயற்கண் தரைநோக்க
தாவிவரும் அவள்யாரோ?

மலைவளர்த்துக் கான்பெருக்கி
வழியெல்லாம் முள்ளமைத்து,
கலைவளர்த்து ஊணுருக்குங்
காட்சிபல நன்றமைத்து,
அலைவளர்த்துக் கடல்பரப்பி,
அழகெனவே செய்துவைத்தான்;
சிலைவளர்ப்போர் வியப்புடையாள்
சீர்நடைகள் பயில்வதெங்கே?
--0—0—

காதலிலே தோல்வியுற்றால் ……

உள்ளத்து நெருப்பை மூட்டி
உவகையை வற்றச் செய்தாய்!
பள்ளத்துப் பாயும் எண்ணம்
பழியை நாடிச் செல்ல

மேலான எழிலைப் பெருக்கி
மெலிவான உடலைக் காட்டி
‘கூலா’க நடந்து காதல்
குகையுள்ளே கூட்டிச் சென்று

நெஞ்சினையே உருக்கி விட்டாய்;
நேர்மையெல்லாம் ஓட்டி விட்டாய்;
வஞ்சினத்தில் சொல்லைத் தோய்த்து
வாரியென்மேல் இறைத்துப் பள்ளப்
படுகுழியில் வீழ்த்தி விட்டாய்
பாதகியே நின்றன் நெஞ்சப்
படுகுழியில் நஞ்சை நிரப்பிப்
பாரினையே முழுக்க வந்தாய்;

காட்டுள்ளே விலங்கு போல
கானத்து மிருகம் நீயே!
ஏட்டுள்ளே உன்னப் பூட்டி
ஏசித்துப் பழியைத் தீர்ப்பேன்!
-0—0—


காதலிலே வெற்றியுற்றால் ……
மோகனக் கற்பனைகள் முயன்றும் வரவில்லை
தோகை!நின் பேச்சுக்குச் சூட்டும் அழகெங்கே?
கானக் கருங்குயிலும் வீணைக் குழலிசையும்
நாண உன்குரலைச் சாணைப் பிடிப்பதெங்கே?
அன்பே ஆரமுதே! ஆலம் விழுதைப்போல்
நெஞ்சின் நினைவுன்னை நோக்கிப் படருதடீ!
வஞ்சிக் கொடியணையாய்! வாடி வதங்குகிறேன்
பஞ்சுக் கைகள்தம் பட்டான முத்தங்கள்
நெஞ்சில் ஏறுதடீ, நெருப்புச் சூட்டைப்போல்!
வேட்கைப் புகைகிளப்பி விந்தை மணம்பரப்பும்
வீட்டுச் சாம்பிராணி வேலையில்லை, காதல்தான்!
--0—0—
கிளி விடு தூது
ஆடி அசைந்து
ஓடி வா என
பாடி அழைக்காயோ -- கிளியே
பாடி அழைக்காயோ! (ஆடி)

நாதம் இழையும்
ஊதுங் குழலால்
கீதம் இசைப்பேனே -- எனநீ
வாதம் செய்தவளை (ஆடி)

வானத் திரையிலே
ஆன திருளே
மீன விழியாளை -- என்றன்
ஊனில் உயிர்தங்க (ஆடி)

சோலை நடுவிலே
மாலை முடிவிலே
காலம் மறந்தேன் -- அவளின்
கோல உருக்காண (ஆடி)

தாகம் வளர்த்த
சோகத் தீயிலே
சாகும் நிலைகொண்டேன் – கிளியேனி
வேக மாயேகி நீ (ஆடி)
-- 0--

அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீவாஸன்
14-7-09
--------------

Monday, July 13, 2009

காதல் கவிதைகள் (2)

காதல் தத்துவம்
ஊற்றுகள் ஆற்றில் கலக்க
ஆறுகள் கடலில் கலக்க
காற்றெனும் இன்பத் தென்றல்
கூட்டுமே இனிய உணர்வை!

உலகில் உள்ள யாவும்
ஒன்றென் றிருந்த தில்லை;
பொலிந்திடும் நீயும் நானும்
பிறந்தது அதற்கே யாமே!

விண்தனை முத்தம் இடும்பேர்
மலைகள் தம்மைக் காணாய்!

தண்ணளி அலைகள் தாமும்
தழுவிடும் காட்சி பாராய்!

கதிரவக் கதிர்கள் நிலத்தைக்
களிக்கும் அணைத்து; மக்கள்
மதிப்பரோ இவைதனை எனக்குநீ
முத்தம் தாரா தேகில்?
-0-0-

கொடுத்தும், கொன்றனையே!

மண்ணோடு தேய்ந்துலக வழிநடக்கச் செய்தாலும்,
கண்ணோடு கருத்தெல்லாம் கற்பனையும் எழில்தேடி
பண்ணாலே பாடிவைக்கும் பேறெனக்குத் தந்தாலும்
பின்னாலே பறக்காத பாழிறக்கைச் சாபமேனோ?

கொடிபடர மரம்நட்டுக் கோபுரமாய் வளர்வித்து
அடிபாவ உரமிட்டு ஆயிரம்கால பயிர்போல்
துடிப்பான மனதோடு துளிர்க்கொடியை வைத்தாலும்
வடிவழகு நன்மலர்கள் வழங்காது போனதுவேன்?

வானகத்தே ஒண்மலர்கள் வந்துவந்து கண்சிமிட்ட
கானகத்தே கருங்குயில்கள் கனிந்தகுரல் இனிதெழுப்ப
நானகத்தே கொளுமாசை நாகம்போல் சீறியெழ
வீண் அகத்தே இருள்கவ்வி விழலாக்கித் தீர்த்துவிட்டாய்!

சிந்தனைக்கே ஒருமனதைச் சிறப்பெண்ணித் தந்ததனால்
நிந்தனையே அறியாத நாவாலே பாட்டிசைக்க
வந்ததனிப் புகழ்யாவும் வாட்டமுறப் பறித்திட்டாய்;
செந்தழலால் சுட்டெரித்துச் செழும்நாவை அழித்திட்டாய்!

தொட்டதொன்றை அறிந்தறிந்து தொடாததனை உணர்கிறதும்
கிட்டதொன்றை மனம் நினைந்து கிடையாததை விட்டொழித்தும்
பட்டதெல்லாம் உரைக்கின்ற பண்பினையே தந்தாயே;
கெட்டதுவோ உன் எண்ணம்? கொன்றனையே கொடுத்தெல்லாம்!
-0-0-

நீங்காத நினைவானாய்….

நீங்காத நினைவானாய் நின்றாயோ? நின்றாயில்!
தாங்காத இதயத்தில் தனிநடனம் புரிகின்றாய்!
ஏங்காத நாளுண்டோ? என்தொல்லை யாரறிவார்?
பாங்காகக் கதையுரைத்தும் பரிவில்லை கண்டேனே!

பாட்டாக்கி மனம்சுவைக்கப் பலமுறையும் நின்நினைவாய்
ஏட்டாலே அன்புரைக்க எண்ணற்ற கவிதைகளும்
காட்டாறு போல்வந்து காவியமாய் நின்னுருவைத்
தீட்டாத ஓவியமாய்ச் சிலையெழுப்பும் என்மனத்தே!

உள்ளத்தே குடியிருந்து உருவாகும் கற்பனைக்கு
ஒள்ளியதாம் பொருளாகி, ஓர்நிலையில் மயங்கிவிழும்
கள்ளமுதச் சாறாகிக் கவிதைக்கும் உணர்வளித்தாய்,
துள்ளுமிரு கயலேந்தும் தூயமலர்த் தாமரையே!


நன்னாளும் வருமென்றே நனவழிந்த கனவுகளில்
பொன்னான உன்முகமும் பூரிக்கும் புன்சிரிப்பில்
இன்னாகக் கலந்தமுதம் என்னுயிரும் சுவைக்கின்ற
இந்நாளும் மறைந்திடுமோ, இன்னுமொரு சின்னாளில்?
-----0-----
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
13-7-09
----------------

Sunday, July 12, 2009

காதல் கவிதைகள்

இளம் வயதில் மனத்தில் பொங்கும் காதல் உணர்வுகளுக்கு ஒரு வடிகாலாக கவிதைப் பேராறு அமைந்தது. கற்பனையை மட்டும் அனுபவிக்கலாம். அந்த அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கடற் காதலி

அலைபாயும் கடல்வழியே
அவளின்று வருவாள்! (அலை)

செந்தாமரை இதழ்களினால்
சொரிவாளே தேனமுதம்!
மெந்தாளை அசைத்துநடம்
எழிலோடு புரிவாளே! (அலை)

அழகுக்குத் தெய்வமவள்
ஆனந்தத் தெய்வம்!
சுழலுமவள் கண்மணியால்
சூழ்ந்துகொள்வாள் என்னை! (அலை)

திரைபொங்கும் பெருங்கடலில்
தினமாடி இன்பம்
கரைகாணா அன்புக்கடல்
கலந்திடவே அளிப்பாள்! (அலை)

----
குயில் விடுதூது

பண்ணால் என்னையும்
பின்னிடும் குயிலே!
எண்ணா எழில்மிகும்
எந்தலை வோனின்
உண்ணா அமுதமே
ஊறிடும் நெஞ்சில்
பண்ணால் இதனைப்
பொழிந்திடு வாயே!
(வேறு)
புவியில் இலாத ஆசை,
பூவில் இலாத நாற்றம்,
கவியில் இலாத பண்ணும்,
காதல் கொளாத இசையும்,
தவியாய்த் தவிக்கு மென்றன்
தாழா உளமுங் கொண்டு
அவியா தவன்பும் தவழ
அவர்தம் வழியை நோக்கும்!

நடரா சனடித் தொழுமாம்
நங்கை எனையார் காணும்?
படராக் காதல் தழுவும்
பழமே போல உள்ளும்
இடரா நடனம் நோக்கி
இல்லா உவகை எய்தும்!
அடரா ததில்லை எந்தன்
அன்பே என்றே கூறாய்!
(வேறு)
உலகுதன் இருளும்
ஊறிய தெனக்கு;
அலகிலாத் துன்பம்
அகமது எண்ணும்;
தலவரைக் காணாத்
தலவியைக் காணாய்,
நிலையிலா நினைவாய்!
நீயுடன் செல்லாய்!
-0-0-
மேகம் விடு தூது

வெண்நுரையாய் விண்கடலில் விளையாடித் தவழ்கின்றாய்!
பெண்ணிங்கே உள் உருகிப் பிரிவுற்று வாடுவதைக்
கண்டிலையோ வெண்முகிலே? கான்கடந்து மலைகடந்து
பண்பாடும் தலைவர்க்குப் பரிந்தோதிச் செல்லாயோ? (1)

வாராயோ வாராயோ வண்முகிலே எனவுன்னைப்
பாராதே ஊணின்றிப் பரிதவித்து நின்றேனே!
சேராயோ என்னுரையைச் சீர்பதிவாழ் ஐயனிடம்?
சோராதே, இளமுகிலே சொன்னதெலாம் உரையாயோ? (2)

நெஞ்சத்துத் தோணியிலே நெடும்பயணம் செய்கின்றான்;
எம்சொல்லும் கேளாத இடத்தெங்கோ உறைகின்றான்;
பஞ்சன்ன மென்முகிலே! பறந்தோடி ஐயனிடம்
‘துஞ்சாளே உனையெண்ணித் துடைப்பாயே துய’ரென்பாய்! (3)

மலைமுகட்டுப் புனல்பொழிந்து மண்தவழ்ந்து , பதுமத்தின்
இலைமுகட்டு முத்தாகி இன்பமுறும் தண்முகிலே!
கலைமுகட்டுப் புகழுற்ற கவியோன் தன் நினைவுற்று
முலைமுகட்டு நீர்சோர முன்வாயில் கிடப்பேனே! (4)

கடல்தந்து வான்வளர்ந்து கடன்செய்யும் நன்முகிலே,
உடல்தங்க உளம்செல்ல உத்தமனை உடன்புணரத்
தொடர்கின்றாள் நங்கையெனத் தூதுரைத்துச் சென்றேஎன்
இடர்தீர்த்துப் பிரிவென்னும் இன்னலினைத் துடைப்பாயே! (5)

சந்தனமும் தழலாகும்; சங்கோசை துயரூட்டும்;
வெந்தனலை மிகைப்படுத்தும், வீசுகின்ற தென்றலுமே!
சுந்தரனை உளமுன்னிச் சூழ்த்தனளே துன்பமெனச்
சிந்தனையில் கொண்டவர்க்குச் செப்பிடுவாய் தண்முகிலே! (6)


‘கவிபாடி உளக்காதல் காட்டுமுனை உளங்கொண்டு
தவித்தோடி தேடுவளே, தண்மலர்சேர்ப் பொழிலெல்லாம்;
“அவியாதோ பிரி”வெனவே அலங்கொண்டாள் தையலென்றே
புவிபோற்றும் மன்னனிடம் போந்தேநீ ஆர்ப்பாயே! (7)

காவிரியில் விளையாடிக் கங்கையிலே தவழ்ந்தோடிப்
பூவிரித்த பெருஞ்சோலைப் புகுந்தேகும் மென்முகிலே!
பாவிரித்துக் கவின்செய்யும் பதுமனையான் உன்னுவதை
நீவிரித்தே உரைசெய்யாய், நீர்விரிக்கும் நன்முகிலே! (8)

நிலம்வளர்த்துத் தண்பெருக்கி நில்லாது புகழ்வெறுத்துக்
கலம்வளர்த்தே எமைக்காத்துக் கருணைசெயும் கார்முகிலே!
வலம்பிடித்துக் காபுகுந்து வான்சிறக்கக் கவிபாடி
நலம்வளர்க்க வாவென்று நயமிகவே சொல்லாயோ? (9)

(இந்த கவிதை, அடியேன் சென்னையில் என் வீட்டிலிருந்து பல மைல்கள் நடந்து ஓர் உறவினர் வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும்போது மனத்தில் புனைந்தது. அதை அப்படியே வீடு திரும்பியதும் ஏடு படுத்தி வைத்திருந்தேன். சில ஆண்டுகளுக்குப் பின், (சுமார் 1963-ம் ஆண்டிருக்கும்), புதுதில்லி வந்தபோது, தில்லித் தமிழ்ச் சங்கம் நடத்திய ஒரு கவிதைப் போட்டிக்கு “பத்மம்” என்கிற புனைப் பெயரில் அனுப்பினேன். எதிர்பாராத விதமாக, அது பாராட்டுக்குரிய் கவிதையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது. சங்க மலரொன்றிலும் வெளியிடப் பட்டது.)
--0—0--
காதல் மயக்கம்
சிரித்துச் சிரித்துப் பார்க்கும் அழகில்
சிந்தை மயங்கி நின்றேன் (சிரித்து)

விரித்து விரித்து விழிகள் நோக்க
வினைகள் அற்றுப் போனேன். (சிரித்து)

நிறுத்தி நிறுத்தி நினைவில் நிறுத்தி
நின்முக ஒளியைக் கண்டேன். (சிரித்து)

வருத்தி வருத்தி வாட்டு கின்ற
வேதனை தொலைந்த தம்மா (சிரித்து)

நினைத்து நினைத்து நெஞ்சம் உருகி
நேசக் கடலாய் ஆகியதே (சிரித்து)

உனையே உனையே எண்ணி எண்ணி
உன்மய மாகி நின்றேன் (சிரித்து)
-0-0-

(தொடரும்)
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
12-7-2009
---------------

Friday, July 10, 2009

தனிக் கவிதைகள்

அடியேன் இளம் வயதில் புனைந்த சில தனிக் கவிதைகளை இப்போது சமர்ப்பிக்கின்றேன்:
தைத் திங்கள்

மார்கழி முப்பதும்
மெள்ளவே தப்பிட
ஆர்த்திடச் சேவலும்
ஆளதை வருகிறாள்!

ஒவ்வொரு ஆண்டிலும்
ஓடியே வருகிறாய்!
எவ்வள(வு) ஈடினை
எழுதுவேன் உனக்குநான்?

பகலிலே வெம்மையால்
பட்டிடத் துன்பமும்
நகரவே மதியெனும்
நங்கைபோல் வருகிறாள்!

பொங்கலிந் நாளிலே
பொங்கவே புதுமையும்
எங்களைக் காக்கவே
எழிலரசி வருகிறாள்!
-0-0-
பொங்கல் !
பொங்கல்! பொங்கல்! புதுப்பொங்கல்!
எங்கும் பொங்கும் இசைப்பொங்கல்!

அன்பின் பொங்கல் இன்பொங்கல்!
இன்ப வாழ்வின் ஒளிப்பொங்கல்!

நாடு செழிக்க நற்பொங்கல்!
மாடு மகிழ மணப்பொங்கல்!

மங்களம் பொங்கும் மாப்பொங்கல்!
தங்கவே நலமே தனிப்பொங்கல்!
பொங்கலோ பொங்கல்! புதுப்பொங்கல்!
பொங்கலோ பொங்கல்! பொன்பொங்கல்!
-0-0-

இதயப் பரிசு

ஆசைமுகங் கண்டு -- மன
ஆவலினைக் கொண்டு
இசைபாடும் ஆற்றலினால் இவர்புரியும் தொண்டு
பசைபோல் நெஞ்சத்திற் பதிந்ததுவும் உண்டு!

அறியுமெழில் துள்ள --- உளம்
அலர்ந்துமணங் கொள்ள
வறியேனை கீழேனை வந்துவின்பந் தள்ள
பெரிதாக முகங்காட்டி பொழிந்தாரே சொல்லை!

ஆடுங்கலை யரசி -- நெஞ்சு
பாடும் இசை யரசி
ஓடி அவர் உள்ளத்தில் ஒளிந்தாளே; அரசு
ஓயாது புரிகின்றாள் ஒப்பிலாத அரசி!

மலர்சொட்டுந் தேனே -- பெரும்
மனமாகும் வானே
பலர்புகழ பண்ணோடு நாடகத்தைத் தானும்
நிலையோங்க இயற்றுவதை நீங்களின்றே காணீர்!
-----
மனம்
மனமேநீ சென்று விட்டால்
மாளாத் துயரம் அடைந்திடுவேன்
தினமுமெனைத் தேற்றி விட்டாய்
தகுந்த பரிசு என்னசொல்?
துணையாய் என்றன் நிழல்போல
துலக்கும் வண்ண விளக்கேநீ!
கணமும் உன்னைப் பிரியேனே,
கருத்தை அளிக்கும் மனமேநீ!
000
எண்ணிப் பலவும் அளித்திட்டாய்
எழுத்தால் எடுத்து விளக்கிட்டாய்!
நுண்ணிய தெல்லாம் கொடுத்திட்டாய்
நீங்காத் துயரை நீக்கிட்டாய்!
கண்ணினும் மென்மைக் கண்ணேநீ!
கவிதை அருளும் பெண்ணேநீ!
கண்ணினைப் போலுனைக் காப்பேனே!
கனிபோ லினிக்கும் மனமேநீ!
----
(தொடரும்)
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
ஜூலை 10, 2009
------------------------

Wednesday, July 8, 2009

குழந்தைக் கவிதைகள் -- தொடர்ச்சி

பூச்சியும் மலரும் !

பூச்சி: பட்டுச் சிறகடித்துப்
பறந்து வந்தேன் – உனைத்
தட்டுப் பிடித்தொரு
முத்தம் தந்தேன்!

இதழை விரித்தென்னை
அணைத்துக் கொள்வாய் – உன்றன்
மதுவை எனக்களிக்க
மலர்ந்து கொள்வாய்!


மலர்: என்னையே தேடிவரும்
அழகு பூச்சி! -- உன்னைக்
கண்டதும் உள்ளத்தில்
களைப்பே போச்சு!

எங்கும் திரிந்துவரும்
உன்னைக் கண்டால் -- எனக்குப்
பொங்கும் பொறாமை
பெரிதும் உண்டாம்!

யாரும் உனைக்கேட்க
ஏதும் இல்லை -- எந்த
ஊரும் உன்றனக்கு
எதிராய் இல்லை!

பாடிப் பறந்துவரும்
பட்டுப் பூச்சி! – உன்றன்
ஆடலில் மயங்குகின்றேன்
ஆனந் தமாச்சு!
--0—0--
பேடையின் பிரிவு

கட்டிவைத்த கூடிருக்கக்
கண்ணேநீ எங்குசென்றாய்? (கட்டி)

விட்டுவைத்த நெல்பொறுக்க
வீடேகிப் போனாயோ?
தட்டுவைத்த குழந்தைக்குக்
கதைசொல்ல போனாயோ? (கட்டி)

நேற்றிரவு வேறிடத்தில்
நான் தங்கி விட்டதனால்
சீற்றம்தான் கொண்டாயோ?
சீராகப் புல்லடுக்கிக் (கட்டி)

நான்கேநாள் ஆகுமுன்னே
நம்காதல் பழுக்குமுன்னே
வீண்காதல் ஆயிடுமோ?
விழலாகிப் போயிடுமோ? (கட்டி)
--0-0-- (தொடரும்)
தாஸன்
அன்புடன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
9-7-2009

Tuesday, July 7, 2009

குழந்தைக் கவிதைகள்

ஒரு கால விசேஷத்தில், அழ.வள்ளியப்பா முதலிய குழந்தைக் கவிஞர்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர்களுடைய தொடர்பினால் சில கவிதைகள் உருவாயின. அவற்றில் சில……

ஆனையும் பாப்பாவும்

ஆனை ஒன்று வருகுதாம்!
ஆடி ஆடி வருகுதாம்!
பானை போன்ற வயிறைத்
தூக்கி மெதுவாய் வருகுதாம்!

பாப்பா தம்பி தங்கையும்
பார்க்க ஓடி வந்தனர்!
பாப்பா கையைத் தட்டிப்
பார்த்துப் பார்த்துச் சிரித்ததாம்!


நாலு காலும் அசைந்திட
நீண்ட கையும் ஆடிட
வாலும் காதும் விசிறிட
வானும் அதிர வருகுதாம்!

என்றே கேலி செய்த்ததாம்,
எங்கோ வந்த ஆனையை!
சென்று எங்கோ மறைந்ததே,
அருகில் ஆனை வந்ததும்!
--0--

எண்ணியபடி செயல்!

சின்ன அழகுக் குருவி -- அது
சின்ன வீடு கட்டி அதில்
என்றும் வாழ நினைத்ததாம்!
எண்ணி யெண்ணிப் பார்த்ததாம்!

வீடு கட்ட குச்சி தேடி
வீடெலாம் அலைந்து சென்று - இந்த
நாடு முழுதும் திரிந்ததாம்!
நாலு குச்சி கிடைத்ததாம்!

குச்சி எடுத்துப் பறந்து வந்து
குடிசை ஒன்றைக் கட்டி மரத்தின்
உச்சிக் கிளையில் வசித்ததாம்!
உளத்தில் மகிழ்ச்சி கொண்டதாம்!
--0--
பொம்மை கல்யாணம்

கண்ணன் என்பது என்பொம்மை!
கமலா என்பது அவள்பொம்மை!
எங்கள் பொம்மை இரண்டிற்கும்
எட்டாந் தேதி கல்யாணம்!

‘பாம்பாம்’ மோட்டார் ஊர்வலமே,
பார்த்து மகிழ்வீர் அன்றைக்கு!
‘தாம்தீம்’ என்று நாட்டியமும்
கொட்டு மேளமும் ஏற்பாடு!

என்னைச் சும்மா அழைக்காதீர்,
எனக்கு நிறைய வேலைகளே!
தின்ன இனிக்கும் பண்டங்கள்
செய்யும் வேலை நிரம்பிருக்கு!

‘வாரும் வாரும்’ எனச்சொல்லி
வணங்கி உம்மை வரவேற்போம்!
பாரும் பாரும் அந்நாளை
பார்த்தால் வியந்தே போவீர்கள்!

----
தாத்தா தாத்தா கதை சொல்லு!

தாத்தா தாத்தா கதைசொல்லு,
தாத்தா நல்ல தாத்தாநீ!
கேட்டால் நன்றாய் சிரிப்புவர
கேலிக் கதைகள் பலசொல்லு!

கொட்டைப் பாக்கு கொண்டுதரேன்,
கொலையில் லாதக் கதைசொல்லு!
வெட்டுங் குத்தும் வேண்டாமே,
வீணே பயத்தைக் காட்டாதே!
வெற்றிலைச் சுண்ணாம் புநான்தருவேன்,
வேடிக்கை யாகக் கதைசொல்லு!
நெற்றிச் சுருக்கி எங்களுக்கு
நீதிக் கதைகள் மிகச்சொல்லு!

தாத்தா தாத்தா கதைசொல்லு,
தாத்தா நல்ல தாத்தாநீ!
--0--
எறும்பே!
எதை நீ தேடுகின்றாய்! எறும்பே, சிற்றெறும்பே!
உதவி செய்வேன்நான் உனக்கு யாதுவேண்டும்சொல்!

சுற்றிச் சுற்றிவந்து சிவக்க உன்சிற்றுடல்
பெற்றிடா தாத்துன்பம்? பேசா துசெல்கின்றாயே!

அச்சம் கொள்ளாதே அடித்திட மாட்டேனுனை!
மிச்ச முள்ளவெல்லாம் சிறிதளிக் கின்றேன்நில்!

--0--
தீ
சுட்டெரிக்கின்றாய் --- உனைநான்
தொடிட மாட்டேனே!
சிவந்ததுன் முகம் --- ஆனால்
கரிந்தது உன் நெற்றி!
வளைந்தாடுகின்றாய் --- சுட்டால்
வரமாட்டேன் அருகில்!
களைந்தெறிகின் றேன் உன் --- சூட்டை
காணோமே உனையே!
--0--
(தொடரும்)

தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
ஜூலை 7, 2009

Sunday, July 5, 2009

தாயார்

என்னை ஈன்று குறைவிலாது வளர்த்த எனது தாயார் – இவ்வுலகில் மேலும் இருக்க மனமிலாது – எனது சிறு வயதிலேயே (16-ம் வயதில்) இவ்வுலகை நீத்துச் சென்றுவிட்டாள். …… எங்கே ? …. எங்கே?... என்று நானும் அவளைத் தேடி அலைகின்றேன். ஒவ்வொரு இயற்கை வடிவையும் ஊடுருவிச் சென்று தேடுகின்றேன். என் கண்ணிலே படவே இல்லை. இயற்கையின் எழிலோடு சேர்ந்தாளோ? கடலின் நிற்கா ஒலியோடு சேர்ந்தாளோ? இரும் வானத்து ஒளியிலே கலந்தாளோ? மனிதக் காதலெனும் அன்புக் குழம்பிலே கலந்தாளோ? பெண்மையின் எழில்நடையில் சேர்ந்தாளோ? வண்ண இளம் குழவிதனின் புன்னகையிற் புகுந்தாளோ? வானத்தில் வட்டமிட்டு வேடிக்கை பார்க்கும் இளம் மதிக்குச் சென்றாளோ? எங்கு சென்றாள்? எங்கே? இனி, என் கண்ணெதிரே வந்து காணமாட்டாளோ?....... இப்படித் தவித்த மனத்தில் எழுந்தன பின்வரும் இரு கவிதைகள்:
(1)
எழிலினை இயற்கை கனிந்தது போல
எழில்மிகும் நீயெனை ஈன்றெடுத் தனையோ?
ஐயிரு திங்கள் உயிருன தாலே
தாங்கி என்னை ஈன்றாய் அன்று
ஏங்கும் என்னை இன்று புவியில்
தனியே நிற்க விடுத்தனை யோநீ?
இனியும் என்னால் இயல்வது யாது?
உலகம் என்னை உன்னைக் கேட்டால்
அலற அலறச் செய்தனை யோநீ?
-----

(2) பிரிவாற்றாமை

வாழவகை தெரியவிலை; வழியொன்றும் காணவிலை;
ஆழமாகச் சிந்தைதனை ஆராய்ச்சி செய்துவிட்டேன்!

வருகின்ற காலந்தனை வகுத்திடவே திட்டமிட்டு
உறுகின்ற துன்பத்தை உள்ளத்தில் கொண்டேனே!

அன்பினது பெட்டகமாய் அருள்மிக்க அன்னையிலை!
துன்பமிக உண்டதனால் துயருமிகக் கொண்டுள்ளேன்!

ஆளும்வழி யானறியேன்; ஆகும்செயல் ஒன்றறியேன்;
நாளும்வெகு வேகமாக நீண்டுநீண்டுச் செல்கிறதே!

பாரினிலே காலனுக்குப் பாராரோ யாருமில்லை?
ஆருரைத்தார் காலனுக்கு அவளிடத்து வந்தடைய?

எழிலேந்திப் பொழிவேந்தி எண்ணில்லா மலர்தாங்கி,
வழித்தடத்தில் நிற்கின்றப் பெருமரமே! மெலிகொடியே!

ஆருரைத்தார் வழிதனையே அன்றுவந்த காலனுக்கு?
அறிவீரோ நீங்களெல்லாம்? அறிந்திடில்நீர் உரைப்பீரே!

மண்ணிதனில் உயிரளிக்கும் மறையாத காற்றே,நீ
எண்ணிச்சொல் பதில்தனையே ஒருவார்த்தை உரைப்பாயே!

உலகத்தில் ஓயாது ஓசையிடும் பெருங்கடலே!
நிலத்தினிலே யாராவார்? நீஏதும் கண்டதுண்டோ?


காலையிலே கதிரவனைக் கண்டு மிக ஆர்ப்பரிக்கும்
சோலைக்குயில் களே!நீவிர் சொன்னவரை அறிவீரோ?

மண்ணவர்க்கு உணர்வளிக்கும் மங்காத கதிரொளியே!
எண்ணத்தில் உள்ளவற்றை எடுத்தெனக்கு உரைத்திடுவாய்!

மாலையெனும் போதினிலே மங்கையைப்போல் நாணிவரும்
சோலைதனின் தண்ணொளியே! சொல்லிடுவாய் உன்கருத்தை!

ஒருகுற்றம் மனமாசு ஒன்றுமவள் அறியாதாள்,
உருமாறிப் போனதேனோ? உயிரற்று ஆகியதேன்?

எத்தனையோ நாட்களுமாய் எங்கெங்கோ சுற்றிவந்து
அத்தனையும் கேட்டுவிட்டேன், அவளைத்தான் காணவில்லை!

வாராயோ என்தாயே! வளராதோ உன்பாசம்?
தாராயோ உனதன்பு? தாளிரண்டும் காட்டாயோ?

எங்குதான் சென்றுவிட்டாய்? என்றனுக்குக் கூறாயோ?
அங்குடனே வந்திடுவேன், ஒருவார்த்தை பேசாயோ?
-----
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
ஜூலை 6, 2009

Saturday, July 4, 2009

இயற்கை வர்ணனைக் கவிதைகள் -- தொடர்ச்சி

இயற்கையை வர்ணிக்கும் அடியேனது முந்தைய கவிதைகளை மீண்டும் தொடர்கிறேன்:
ஆறு
மலையிலே பிறந்து மண்ணிலே பாய்ந்து
அலைதனை உடையாய் ஆக்கிக் கொள்வேன்!
காடும் சோலையும் காணும் நானும்
பாடும் குயிலதன் பாட்டைக் கேட்பேன்!
குழந்தை போன்றே “குறுகுறு” என்றே
அழகாய் நானும் ஆடிச் செல்வேன்!
அம்புலி நிலாவும் ஆசை யுடனே
வம்பு செய்ய வருவாள் என்னிடம்!
நடுவே சிறுவர் நீந்தி ஆடப்
படுவேன் பாடு! பார்த்தால் தெரியும்!
---
குருவி

கடலே, கடலே! கதையைக்கேள்!
காதலுடனே உரைக்கின்றேன்!
துடைத்து துன்பம் ஒழித்தென்றன்
தூய உள்ளக் கதையைக் கேள்!
சடசட என்னும் மழையே கேள்!
சோகம் பொங்கும் கதையைக் கேள்!
கடகட தடதடா இடியே கேள்!
கொடுமை நிறைந்த கதையைக் கேள்!

காற்றே! காற்றே! உரையைக் கேள்!
கலங்கும் என்னை ஆற்றிக் கேள்!
ஊற்றே, ஊற்றே! உரையைக் கேள்!
ஊறும் எந்தன் கதையைக் கேள்!
ஆறே ஆறே! என்னுரை கேள்!
ஆகாத் துன்பத்தை எடுத்துச் செல்!
நேற்றே வந்தச் செடியே கேள்!
நேரும் துயரை நீயே கேள்!
000

பகலில்……..
பகலில் வெயில்மிகப் பரந்திருந் தாலும்
அகமும் மூழ்க் ஆழ்ந்த நினவில்,
துன்பம் வந்தும் தளரா உறுதி
இன்பங் காட்ட இனிதாய் நடந்தேன்;
செல்லும் பாதை சீராய் நீள
மெல்லும் நெஞ்சம் மென்மை எண்ணம்:
“தமிழின் பெயரால் தருணம் கடத்தி
எமதின் ஆசை ஏறிடப் போகும்;
உலக அரங்கில் உயரே பறக்கும்;
அலகில் தமிழின் அன்பைப் பெற்றுத்
தலைவன் அவனைத் தாளில் பணிந்து
விலைமதிப் பில்லா வண்டமிழ்க் கவிதை
அவனடி பரப்பி அருள்தனைப் பெற்று
எவரு மெய்தா இன்பம் அடைவோம்.”
என்றென் உள்ளம் எண்ணிச் செல்ல
என்றன் தலைவன் அகமடை வேனே!
எழிலுறப் பேசிடும் என்தலை வோனை
பொழிய அன்பைப் பொலிவுடன் கண்டு
இதயம் விரியக் கண்மலர் அந்தச்
சிதையாக் காட்சியைச் சுவையாய்க் காணும்!
000
முகில் – 1
கடலிலும் ஆற்றிலும் நீரினை எடுத்து
தாகமே கொள்ளும் செம்மலர் களுக்கு
மடமட எனவே மாரி பொழிவேன்!
மடல்கள் பகலில் மயக்கத் திலாழ
ஒளிநிழல் தனைநான் தாங்குவேன்; எனது
சிற்குகள் சிறுபயிர் எழுப்பும் பனித்துளி
உதிர்க்கும்; அசையும் அவைகள் பரிதியின்
முன்னே ஆடித் தாய்தன் மார்பில்
தவழும் போதே; பசுந்தரை மீதில்
மழைதனைப் பொழிந்து வெண்ணிற மாக்குவேன்;
மீண்டும் அவற்றை மழையில் கலக்கி
கடகட என்றே சிரித்துச் செல்வேன்!
000
முகில் – 2
மலைசோலை மீதுதவழ் முகிலெனநான் அலைகின்றேன்!
கலையுள்ள உணர்வள்ள காட்சிபலக் காண்கின்றேன்!

குளமொன்றின் கரையோரம் கூடும்நுனி மரத்தடியே
அளவற்ற பொன்மலர்கள் ஆடியாடி மனமீர்க்கும்!

பொன்னிறமாய்க் கோடிழுத்து மின்னல்மறை வதுபோன்று
எண்ணற்றப் பொன்மலர்கள் எழிலாக அசைந்தாடும்!
-0-0-(தொடரும்)

அன்புடன்
தாஸன்
அன்பில் எஸ். ஸ்ரீனிவாஸன்

Friday, July 3, 2009

இயற்கை வர்ணனை

இளமையில் அடியேன் சென்னை, மயிலையில் கடற்கரைக்கு அருகாமையில் வாசம் செய்து வந்தேன். அநேகமாக தினமும் கடற்கரைக்கு நடந்து செல்வது வழக்கம். அப்போது இயற்கை எழிலை கண்ணாரக் கண்டு அனுபவித்திருக்கிறேன். இளம் வயது துடிப்பில் சிறு சிறு கவிதைகளை வடிப்பது வழக்கமாக் இருந்தது. அவற்றை இப்போது மீண்டும் கண்ணுற வாய்ப்பு ஏற்பட்டது. அவற்றை ஒரு சிறுவனுடைய படைப்பு என்பதை மனத்தில் கொண்டு படியுங்கள். தவறுகளை மன்னித்து மறந்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவற்றில் சிறுவர் பத்திரிகையான “கண்ணன்” வெளியிட்டதும் அடங்கும். அப்போது, ‘பத்மம்’ என்னும் புனைப்பெயரைக் கொண்டிருந்தேன்.
அன்புடன்
அன்பில் எஸ். ஸ்ரீனிவாஸன்

வர்ணனைக் கவிதைகளில் முதல் தொகுப்பு இதோ:

காலை

தாமரைப் புட்கள் தொழுதிட ஞாயிறு
பாமலர் ஆரம் ‘நா’மகள் சூட்ட
நீள்வரை சூழ்ந்த நள்ளிருள் ஏக
கணங்கணம் சிறிதாய்க் கட்டொளி பிரிய
மணம்தனைப் பரப்பும் மன்னியக் காற்றுடன்
பொதியம் தன்னில் பொழியும் நாற்றம்
கதியெனக் கலந்து சுதியுடன் கூடித்
தென்றல் எனவே சிறுகால் மிதக்க
குன்றிடாத் திரைகள் தோன்றிடும் கடலில்
செவ்வொளி யுடனே சேர்ந்திடும் நீல
வெவ்வொளி யில்லா நல்லொளி தண்மை
அளித்திட எழுவான்; களித்திடும் வானகம்
இருப்பதை அறியும் இவ்வுல கவனது
தருமொளி காணும் தருணம் பிறகே!
எழிலும் இயலும் தழுவிக் கொள்ளும்
காட்சியைக் காணக் காணுமோ ஆயிரம்
மாட்சிமை கூரிய மாவெழிற் கண்கள்?
----

வானக் குடும்பம்

செம்மை படர்ந்தது, சீர்விண் ணென்னும்
நம்மை மயக்கும் நங்கை முகமதில்
இறைவன் *கதிரெனும் இதழ்குவித் தவள்தன்
குறைவிலா எழிலுடைக் கன்னத் திலொரு
அமுதுறை அழகு அதர பானம்
தமதன்(பு) அளிப்பாய்த் தந்திட் டதுமே!
இரவின் கொடுமையின் இறுதியாய்ப் பனித்துளிக்
கண்ணீர் வானம் மண்ணிலே சிந்த
ஆதவன் அரவணைப்பில் ஆவியாய் மறையும்!
நாளே இரவு! நாளெலாம் கூடல்!
இன்பமே ஒளிக்கதிர்! இனிய மக்கள்
தண்மை அளிக்கும் மென்னிள முகில்கள்!
(3-ம் அடி: *கதிர் – கதிரவன்)
---

நிலவு

நீலத்திரைச் சேலையிலோர்
நித்திலம்போல் இன்பமவிழ்த்
தோலமிடும் கடற்புனலில்
ஓடமென மிதக்கின்றாய்!
கோலமெல்லாம் உன்னிடத்து
கூடித்திரண் டெழிற்கோளம்
ஞாலத்திற் கொளியூட்டென்
நெஞ்சத்துநீ தவழ்கின்றாய்!
---
மழை

கடலிலே பிறந்து காற்றிலே மிதந்து
உடலினைப் பஞ்சாய் உருவெனக் கொள்வேன்!
உலகினில் திரிந்து உயர்ந்திடும் மலைக்கும்
தொலைவிலே நின்று தொங்குவேன் விண்ணில்!
கண்ணனின் நிறம்போல் கறுத்திட மேகமாய்
விண்ணிலே ஓரமாய் வளைந்துநான் இருப்பேன்!
கடகட எனநான் கனைத்தே மின்னி,
மடமட எனவே மாரி பொழிவேன்!
தெருவினில் ஓடையாய்த் தேங்கிடும் பொழுது
சிறுவர்கள் கப்பலைச் செய்திடச் சுமப்பேன்!
கதிரவன் சூட்டினைக் களிப்புடன் தடுத்து
மதிதரும் குளிர்ச்சியை மிகமிகத் தருவேன்!
ஆறெலாம் உலகிலே அடைவது கடலினை;
மாறுதல் அடைந்துநான் மறுபடி வருவேன்!
(‘கண்ணன்’ மாத இதழில் வெளியிடப்பட்டது)
---
(தொடரும்)
ஜூலை 4, 2009

Thursday, July 2, 2009

சித்திர கவிதை

ஸ்ரீ வைணவ ஆசாரியர் ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகன் அருளிய ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரத்தில் ‘சித்ரபத்ததி’யில் உள்ள ஸ்லோகங்கள் ஒவ்வொன்றும் ஒரு சித்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. அதைக் கண்டு வியந்த அடியேன் இளம் உள்ளத் துடிப்பின் விளைவாக பின்வரும் கவிதைகள் எழுந்தன:

மண்ணுள்ளே பிறந்தாய் மறையாத புகழுற்றாய்
பண்ணுள்ளே பிணைந்தாய் குறையாத சுகமுற்றாய்
கண்ணுள்ளே புகுந்தாய் கற்றோத நிகரற்றோய்
எண்ணுள்ளே புரந்தாய் ஏற்றாத சகமற்றோய்

நடந்தாய் தாளற நங்கையின் கைபிடித்து
மடந்தாள் தானுற லங்கையின் கையொடித்து
கிடந்தாய் யாதுற காவிரியில் கைமடித்து
இடர்தான் யானறவே விழையின் கைநெடித்து

(மேலுள்ள இரு கவிதைகளில் இரு அடிகளுக்கு நடுவே “/\/\/\” என்ற கோடுகளைப் போட்டால் அதே அடிகள் வருவதைக் காணலாம்.) ---

பின் வரும் கவிதையில் ஒவ்வொரு அடியிலும் இரண்டாவது சீரின் இறுதி எழுத்தை மையமாக வைத்து அதைச் சுற்றி எட்டு வட்டங்களை வரைந்து எட்டு திசைகளிலும் வரிசையாக சீர்களிலுள்ள எழுத்துக்களை வெளிப்புறத்திலிருந்து உட்புறமாக எழுதினால் எண் வரிசை சக்கரம் ஒன்று அமையும்.

கமலத்து வதிந்து காத்தருள் புரிந்து
அமரரும் துதித்து ஆழ்கடல் படுத்து
அமுதனின் மனத்து அமர்ந்த அழகிது
எமதுளம் இசைத்து எழுமுனைப் பணிந்து
அடியேன் தாஸ்ன்,
அன்பில் எஸ். ஸ்ரீனிவாஸன்
3-7-2009
---- (தொடரும்)

அன்பில் முதல் வணக்கம்

அடியேன் அன்பில் ஸ்ரீனிவாஸன், தற்போது புதுதில்லியில் இருப்பு, மத்திய அரசிலிருந்து ஓய்வுபெற்று வாசம் செய்து கொண்டிருக்கிறேன். 68 ஆண்டுகள் நிறைவு பெற்று ஆன்மீகத்தில் பொழுதைப் போக்கி வந்துகொண்டிருக்கிறேன்.
பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே தமிழில் எழுதுவதில் ஆர்வம் மிக உண்டு. கட்டுரைகளையும் கவிதைகளையும் கீர்த்தனைகளயும் எழுதித் தள்ளியுள்ளேன். "பத்மம்" என்னும் புனைப் பெயரின் கீழ் பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
அடியேனுடைய அண்மைக் கவிதைகளைப் பார்த்து, அவற்றில் பலவ்ற்றை கணினி-புத்தகங்களாக வெளியிட்டு வரும் ஸ்ரீமான் திருப்ப்பதி ரகுவீரதயாள் அவர்கள் தந்த ஊக்கத்தின் பேரிலும் வழ்காட்டியதன் மூலமும் இந்த "அன்பில் கவிதை" ப்ளாக்கைத் தொடங்குகிறேன். அடியேனுடைய படைப்புக்களுக்கு வெளிப்பாடாக அமைய எல்லாம் வல்ல ஸ்ரீமந் நாராயண்னின் அருளை வேண்டுகிறேன். இதைப் பார்ப்பவர்கள் எதாவது பயனடைவார்களானால் அது பெருமாளையே சாரும்.

எனவே, முதலில் அவன் வணக்கமாகவே இது தொடங்கட்டும். சிறிய வயதில், அறியாப் பருவத்தில் அடியேன் எழுதிய இறை வணக்கத்துடன் முதலடி எடுத்து வைக்கிறேன். எல்லோருடைய ஆசியையும் கோருகிறேன்.
அன்புடன்
அடியேன் தாஸன்
அன்பில் எஸ். ஸ்ரீனிவாஸன்

கடவுள் வாழ்த்து
---
நிலையிலா உலகில் நீயெனைப் படைத்தாய்!
கலையிலே என்னுளம் கலந்திட வைத்தாய்!
அலையலை யாய்க்கவி ஆயிரம் பாடியுன்
அலகிலாப் புகழ்புவி அனைத்தும் பரப்புவேன்!
-------
தேனுறு கமலத் திருவடி போற்றி!
கானுற நடந்த திருவடி போற்றி!
வானுற உயர்ந்தோன் இணயடி போற்றி!
யானுற அருள்வோன் இணயடி போற்றி!

வையம் ஏத்தும் எழிலடி போற்றி!
தையாள் ஏந்தும் எழிலடி போற்றி!
ஐயன் அழகன் மலரடி போற்றி!
உய்ய உலகெலாம் மலரடி போற்றி!

குணத்துப் பெரியோன் தாளே போற்றி!
மனத்தே இனியான் தாளே போற்றி!
கணத்தும் நீங்கான் தாளே போற்றி!
வணத்துள் வண்ணோன் தாளே போற்றி!


திருவுடை நெஞ்சோன் தாளே போற்றி!
அருளுடைக் கடலோன் அடியே போற்றி!
இருளுடைத் தகற்றும் இணயடி போற்றி!
கருநிறக் கண்ணன் கழலடி போற்றி!
----
உலகெல்லாம் உன்கண்ணுள்!
உய்யவழியும் உன்னொளியில்!
நிலையில்லா உளத்தோரோ
நினதருளிலா மானிடர்கள்!
கலையேஎன் கருத்தெலாமுன்
கருணையேஎன் வேண்டுதலாம்!
அலைபாயா துளமுன்றன்
அடியிணையில் வைப்பேனே!
----
வாடாமலர் தேனார்குழல் மங்கைதனை உடையோனே!
வரையாம்திரு மலையில்திகழ் மாலே!பரம் பொருளோனே!
சேடாதிபன் மேலேயுறை சீரார்கடல் நிறத்தோனே!
சேணாய்முகில் துதித்தேகும் திருவேங்கடப் பெருமானே!
வீடாம்நின தடியேநினை அடியார்மனம் களிப்போனே!
விந்தைபெரும் விந்தையென வியப்பாருனைப் பணிவாரே!
கூடாதெது உள்ளம்தனைக் கூடச்செயும் பெரியோர்க்கே?
கோலம்புரி கோலமுடை எழிலே!எமக் கருள்வாயே!
----
மலராய் கனியாய் மணமாய் தருவாய் பரந்தோனே!
இலனாய் உளனாய் இருளாய் ஒளியாய் இருப்போனே!
நலமாம் பொருளாய் நினைவாய் உளமாய் நிறைந்தோனே!
உலகாய் அணுவாய் உணர்ந்தாய் எமக்கே அருள்வாயே!
----

எழில்தவழ உலகமைத்து எல்லையிலே கவிஞனையும்
கழியெண்ண உளமளித்துக் கனியெனவே கற்பனையும்
பொழிந்திடவே அமைத்தனையுன் பொன்னான அருளுடனே!
அழிந்திடாத படைப்பெலாமுன் அழகினையே பறைசாற்றும்!----- (தொடரும்)