இந்த பாசுரங்கள் இரண்டு வாரங்களுக்கு முன் எழுதப் பெற்றவை.
-------------
கலியன்மேல் காதலினால் கலியனது திருமொழியை
வலிகொண்டு ஊக்கத்தால் வெறிகொண்டு படித்திட்டேன்;
ஒலிநயத்து மூழ்கியதால் ஒன்பதெனும் திருமொழியின்
வலிச்சுழலில் அகப்பட்டு; மீளாது மூழ்கிட்டேன். 1
திருமலையில் குடிகொண்ட தேவனிடம் ஆட்பட்டே
அருசுவையாம் பாசுரத்தில் ஆழ்ந்திழந்தேன் என்மனத்தை;
இருந்தவிடம் மறந்தொழிந்தேன்; இரைந்திரைந்து பாடலுற்றேன்;
ஒருசொல்லும் எனைவிட்டு ஓடாமல் ஒட்டியதே. 2
தாய்தந்தை முதலாகத் தாரமெனும் சொந்தமெலாம்
நோய்களையே தருவனவாய் நலிவடையச் செய்ததெலாம்
நாய்போன்ற என்றனது நினைவினிலே தோன்றினவே;
பாய்கின்ற நதிபோல பாக்களைநான் படித்துவந்தேன்! 3
பெண்களெனும் வலையில்நான் பட்டபெரும் துன்பமெலாம்
கண்ணெதிரே நிறுத்திட்டார் கலியனெனும் நல்லாழ்வார்!
உண்மையிலே இரக்கமின்றி ஒருவருக்கும் நற்செயலை
எண்ணாது இருந்ததனால் இவ்வாழ்வை வீணடித்தேன்! 4
இப்பிறப்பில் நிகழ்ந்ததெலாம் இப்படியெனில் என்றனது
முப்பிறப்பில் எந்நலனும் முயலாமல் இருந்திருப்பேன்!
அப்படியே செய்தவனாய் ஆகிலுமென் நலம்தனையே
தப்பாமல் மனத்திருத்தி நல்வணிகம் செய்திருப்பேன்! 5
சுயநலமே மனத்திருப்பத் திருவேங்கடத் தானையேநான்
நயந்தவனாய் ஒருநாளோ நொடியினிலோ எனதுளத்தில்
பெயரொன்றை எண்ணிடவோ பணிந்தவனை வணங்கிடவோ
முயலாமல் வாழ்வெல்லாம் முடித்திருப்பேன் ஐயமில்லை! 6
மண்ணாலும் நீராலும் மஞ்சுலாவும் இடத்தாலும்
பண்ணியவென் ஆக்கைகளைப் பலவெடுத்தும் புரிந்தேனா
புண்ணியங்கள்? அல்லவல்ல; பாவங்களே செய்திருப்பேன்!
எண்ணங்கள் இப்படியே என்மனத்தில் எழுந்தனவே! 7
கலியனது பாவரிகள் கற்களென ஊன்றிடவும்
செலத்தொடங்கி நடந்திட்டேன் நீள்வழியே; ஓரிடத்தில்
நலம்கேட்டு எனைநிறுத்தி நயமுடனே யாரோஓர்
நலமனிதர் பேசுகையில் நானுரைத்தேன் எனைப்பற்றி! 8
வயதாகிப் போனதனால் வசதியுள இடமொன்றை
விழைந்தடியேன் தேடிலுமே வீணான என்றனது
முயற்சியினைத் தெரிவித்தம் மனிதரைநான் பார்த்துநின்றேன்;
வியப்புடனே எனைப்பார்த்து வலிந்தவரே சொன்னாரே! 9
‘வேறெங்கு போயிடணும், விரையார்திரு மலையிருக்க?
நாறுமலைத் தாழ்வரையில் நிலைகொண்ட அலர்மங்கை
ஊரிலேஓர் அமைப்புளது! உமக்கேற்கும் நன்றாக!
சேருமங்கே!’ என்றுசொல்லி நகர்ந்துபோனார் அம்மனிதர்! 10
யாராரோ பிடித்தேநான் அவ்விடத்தை அறியலுற்றேன்;
நேரத்தைச் செலவிடா தங்கேநான் ஏகினனே;
சீருடனே இயங்கிவரும் நல்லமைப்பைக் கண்ணுற்றேன்;
வாருமென அன்புடனே வரவேற்றார் அடியனையே! 11
இன்றிருக்கும் வீட்டினுக்கோர் ஏற்பாடு செய்துவிட்டு
என்றேனும் ஒருநாள்யான் ஏழுமலை அடிவாரம்
சென்றிடலாம் என்றெல்லாம் செழுங்கனவு பன்னாட்கள்
நன்றுகண்டும் அக்கனவு நனவடையா தாயிற்றே! 12
அவ்வமைப்பில் தங்கியபோ தரியதொரு வாய்ப்புதனால்
செவ்வியசீர் மலைசென்று தேவனுடை தரிசனமே
பவ்வியமாய்க் கிட்டியதால் பெருமகிழ்ச்சி உற்றேன்நான்!
அவ்வளவே அண்டியது! அதன்பின்னர் வேதனையே! 13
என்வீட்டை ஏதும்செய இயலாமல் தொடர்ந்ததுவே
என்வாழ்வு தனிமையிலே; எத்தனையோ நாட்களுந்தான்
தன்னாகக் கழிந்திடவே திருப்பதிக்குச் செலும்வாய்ப்பு
என்னைவிட்(டு) அகன்றதுவே ஏதேதோ சிந்தைகளால்! 14
என்வீட்டில் தனிக்காவல் கைதியைப்போல் இருந்தபோது
என் தெய்வம் மலையப்பன் என்வீட்டில் நுழைந்திட்டான்!
என்னெதிரே தொலைக்காட்சிப் பெட்டிதனுள் பாங்காக
வந்துவந்து செல்கின்றான், மலையினிலே வீற்றிருந்தே! 15
கிட்டத்தில் வந்துநின்று களைநிறைந்த தன்முகத்தைத்
தொட்டிடவே அழைப்பான்போல் துணிந்தவனே காட்டுகின்றான்!
பட்டாடை நடுவினிலே பளிச்சென்று தன்கரத்தை
விட்டொழிப்பாய் கவலையென வலிந்தவனே நீட்டுகின்றான்! 16
“விண்ணோர்தொழும் வேங்கடமே வெகுதொலைவில் இருந்தாலும்
நண்ணியுன்னை நான்நாடி நெருக்கமுடன் உன்வீட்டின்
முன்னறையில் நின்றுகொண்டு மறவாமல் அனுதினமும்
எண்ணற்ற முறையென்றன் எழிற்சேவை காட்டுகின்றேன்! 17
மலையடிக்கீழ் வாழ்வதனால் மீளமீள எனைநேரில்
வலியிலாமல் அண்டியனாய் நெடுநேரம் காண்பாயோ?
அலைபாயும் கூட்டத்தில் அங்கெங்கே எனைக்காண்பாய்?
சிலநொடிகள் காண்பதற்கே செலவாகும் பலநாட்கள்! 18
நானிலாத இடமுண்டோ? நானிலாத நொடியுண்டோ?
நானிலாத நினைவெல்லாம் நன்றாக அமைந்திடுமோ?
நானிலாத செயல்பாடும் நலமாக நடந்திடுமோ?
நானிலாது நீயுளயோ? நெருங்கியுளேன் உணராயா? 19
இருப்பிடமே வைகுண்டம் எனையேநீ நினைத்தாயேல்!
இருப்பிடமே திருமலையாம், என்‘சானல்’ பார்த்தாயேல்!
இருக்குமிடத் திருந்திட்டால் எனையேநான் தருகின்றேன்!
வருத்தமுண்டோ என்னடியை நீவிடாமல் நினைத்திட்டால்? 20
என்னைநினை! அன்புடனே எனைப்பூசி! எனைவணங்கு!
என்னுடனே சேர்ந்திருப்பாய்! எனைவிடுத் தகலாமல்
என்னிடமுன் மனம்வைத்தால் எனைக்காண்பாய் எங்கெங்கும்!
என்னில்நீ இருந்தாயேல், என்னிடமாய் உனைக்கொள்வேன்!” 21
இத்தனையும் அவன்சொல்ல எடுத்துரைப்பர் வல்லுநர்கள்
எத்தனையோ முறைகள்தாம் என்முன்னே எழுந்தருளி
பத்தியினைப் புகட்டுவர்கள்! புவிதனிலே இதைவிடவே
மெத்ததென ஒன்றுளதோ? மெய்கண்டேன் மெய்தானே! 22
-- 0 --
அன்புடன்
தாஸன்
அன்பில் எஸ். ஸ்ரீனிவாஸன்
28-7-2009